என் மலர்
இந்தியா

குழந்தைகளுடன் சுனு-சவுமியா (பழைய படம்)
2 குழந்தைகளை கொலை செய்து தம்பதியர் தற்கொலை

- 4 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சுனு-சவுமியா தம்பதியரின் ஒரு குழந்தைக்கு ரத்த புற்றுநோய் இருந்ததும், அதற்காக தான் சவுமியா வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தாளவாடி பஞ்சாயத்துக்குட்பட்ட சக்குளம் மூலேபரம்பு பகுதியை சேர்ந்தவர் சுனு. இவரது மனைவி சவுமியா. இவர்களுக்கு ஆதி மற்றும் ஆதில் (வயது 3) என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த சவுமியா, சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். இன்று காலை அவர்களது வீட்டுக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.
அப்போது அங்கு சுனு அவரது மனைவி சவுமியாவுடன் தூக்கில் தொங்குவது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு கணவன்-மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதும் மற்றொரு அறையில் 2 குழந்தைகள் பிணமாக கிடப்பதும் தெரியவந்தது.
4 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சுனு-சவுமியா தம்பதியரின் ஒரு குழந்தைக்கு ரத்த புற்றுநோய் இருந்ததும், அதற்காக தான் சவுமியா வெளிநாட்டில் இருந்து திரும்பியதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கியிருந்ததும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
எனவே 2 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, சுனு-சவுமியா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.