search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தல் தோல்வி எதிரொலி: டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அதிஷி

    • நட்சத்திர வேட்பாளர்கள் பலர் தோல்வியை தழுவினர்.
    • காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

    டெல்லியில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வது மற்றும் ஆட்சியமைப்பது தொடர்பான பணிகளில் பா.ஜ.க. மேலிடம் பரபர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவியதை அடுத்து டெல்லி முதல்வர் அதிஷி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை டெல்லி ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதல்வர் அதிஷி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் ஒப்படைத்துள்ளார்.

    ராஜினாமா கடிதத்தை வழங்கிய பிறகு ஆளுநர் மாளிகையில் இருந்து அதிஷி புறப்பட்டு சென்றார். இதைத் தொடர்ந்து டெல்லி சட்டசபை கலைக்கப்பட்டுவதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்செனா கூறியுள்ளார். இது நேற்று (பிப்ரவரி 8) முதல் அமலுக்கு வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க. மொத்தம் 48 இடங்களில் வெற்றி பெற்றது.

    நடைபெற்று முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர்கள் பலர் தோல்வியை தழுவினர்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.



    Next Story
    ×