என் மலர்
இந்தியா

சபரிமலையில் ஐயப்பனை கூடுதல் நேரம் தரிசிக்கும் பக்தர்கள்

- 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
- பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக ஏப்ரல் 1-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக நேற்று திறக்கப்பட்டது. கோவிலின் தந்திரி கண்டரரு பிரம்ம தத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவிலில் விளக்கேற்றினார்.
ஐயப்பன் கோவிலில் முதன்முறையாக பக்தர்கள் 18-ம் படி ஏறியதும் கொடிக்கம்பம் வழியாக நேரடியாக சென்று தரிசனம் செய்யும் புதிய நடைமுறை நேற்று அமல்படுத்தப்பட்டது. அதன்படி 18-வது படியில் ஏறிய பக்தர்கள், கொடிக் கம்பம் மற்றும் பாலிக்கல் மண்டபம் மற்றும் மேம்பாலம் வழியாக செல்லாமல், நேரடியாக கோவிலின் முன்புறம் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதன்மூலம் பக்தர்கள் 30 முதல் 50 விநாடிகள் வரை ஐயப்பனை தரிசனம் செய்தனர். மேலும் இந்த முறை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் உதவியது. 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும். அதன்பிறகு பங்குனி ஆராட்டு திருவிழாவுக்காக ஏப்ரல் 1-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.
2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 11-ந்தேதி ஆராட்டு விழா நடைபெற உள்ளது.