என் மலர்
இந்தியா
நடைபயிற்சி சென்ற ஆசிரியையை கடித்து கொன்ற நாய்கள்
- நாய்கள் உடல் முழுவதும் பலமுறை கடித்து குதறியது.
- அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ் துலாரி சின்கா (வயது 76). இவர், ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார்.
இவரது மகள், அமித்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் பெங்களூரு ஜாலஹள்ளி விமானப்படை கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட 7-வது குடியிருப்பில் வசித்து வருகிறார்.
அமித்குமார் இந்திய விமானப்படை வீரராக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக விமானப்படைக்கு சொந்தமான குடியிருப்பில் அவருக்கு வீடு வழங்கப்பட்டு இருந்தது.
சமீபத்தில் ராஜ் துலாரி சின்கா தனது மகள்-மருமகனை பார்ப்பதற்காக பீகாரில் இருந்து பெங்களூருக்கு சமீபத்தில் வந்திருந்தார்.
இந்த நிலையில் தனது மருமகன் குடியிருப்புக்கு அருகே காலை 6.30 மணி அளவில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது சுமார் 10 முதல் 12 தெருநாய்கள் திடீரென கூட்டமாக சேர்ந்து ராஜ் துலாரி சின்கா மீது பாய்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நாய்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை.
நாய்கள், அவரது உடல் முழுவதும் பலமுறை கடித்து குதறியது. இதை கவனித்த ஒருவர் விரைந்து சென்று நாய்களை விரட்டி விட்டு படுகாயங்களுடன் இருந்த ராஜ் துலாரி சின்காவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து உதவி செய்தார். ஆனாலும் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கங்கமனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சோக சம்பவம் குறித்து பெங்களூரு மாநராட்சி கமிஷனர் துஷார் கிரி நாத் நிருபர்களிடம் கூறுகையில், மாநகராட்சி சார்பில் தெருநாய்களை கட்டுப்படுத்த கருத்தடை, தடுப்பூசி உள்ளிட்ட ஊசிகள் பயன்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
மனித உயிர்கள் முக்கியம். மேலும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றார்.