என் மலர்
இந்தியா

10 ஆண்டில் 193 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு-2 பேருக்கு மட்டுமே தண்டனை: பாராளுமன்றத்தில் தகவல்
- கடந்த 10 ஆண்டில் மொத்தம் 193 அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- இந்த 193 பேரில் 2 பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கேரளாவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ரஹீம் பாராளுமன்றத்தில் அமலாக்கத்துறை பற்றி கேள்வி எழுப்பினார்.
அதில், கடந்த பத்து ஆண்டுகளில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? சமீப ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக வழக்குகள் அதிகரித்துள்ளனவா என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பாக இணை மந்திரி பங்கஜ் சௌத்ரி அளித்துள்ள பதிலில் கூறியதாவது:
கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 193 அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த 193 நபர்களில் மொத்தமாக 2 பேர் மீது மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.
இதில் 01.04.2016 முதல் 31.03.2017 மற்றும் 01.04.2019 முதல் 31.03.2020 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே தலா ஒரு நபர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும், அமலாக்கத்துறை விசாரணைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்த அரசாங்கம் ஏதேனும் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதா என்ற கேள்விக்கு போதிய தகவல்கள் இல்லை என பதில் அளித்துள்ளார்.