search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாட்டில் அதி நவீன எந்திரங்களுடன் 4-வது நாளாக மீட்புப்பணி
    X

    வயநாட்டில் அதி நவீன எந்திரங்களுடன் 4-வது நாளாக மீட்புப்பணி

    • கடந்த 3 நாட்களாக மனித சக்தி மூலம்தான் மீட்பு பணிகள் நடந்தன.
    • தேடும் பணியை பொதுமக்கள் உதவியுடன் கேரள மாநில அரசு விரிவுப்படுத்தி உள்ளது.

    சென்னை:

    கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில் தமிழக எல்லையில் அமைந்துள்ள மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

    அந்த மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் தேயிலை தோட்டங்கள் நிறைந்த முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 கிராமங்களில் அதிகாலை 2 மணிக்கு தொடங்கி 4 மணி வரை அடுத்தடுத்து மலை அடுக்குகள் கடுமையான சத்தத்துடன் சரிந்து விழுந்தன.

    முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 ஊர்களும் தலா 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் உள்ளன. இந்த 7 கிலோ மீட்டர் சுற்றளவும் முழுமையாக சேதம் அடைந்தன. நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிக் கொண்டனர். 600-க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளுடன் மண்ணுக்குள் புதைந்தனர்.

    நூற்றுக்கணக்கானவர்களை அந்த பகுதியில் ஓடும் ஆற்று வெள்ளம் அடித்து சென்றது. மலைப் பகுதியில் இருந்துடன் கணக்கில் எடையுடன் கூடிய பிரமாண்டமான பாறைகள் மண்ணுடன் கலந்து வெள்ளம் போல் வந்து குடியிருப்பு பகுதிகளை அடித்து சூறையாடி விட்டது. இதனால் முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 ஊர்களும் மண்ணில் புதைந்தும், பாறைகளால் மோதியும் அழிந்து உருத்தெரியாமல் போய் விட்டன.

    கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த இந்த இயற்கை கோர தாண்டவத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை வீரர்கள் ஒருங்கிணைந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர். வயநாடு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வந்த மழை காரணமாக கடும் போராட்டத்துக்கு மத்தியில் ராணுவத்தினர் ஒருங்கிணைந்து மீட்பு பணிகளை மேற் கொண்டனர்.

    கடந்த 3 நாட்களாக நடந்து வரும் மீட்பு பணியில் இதுவரை 318 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 240 பேரை காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 கிராமங்களில் வசித்து வந்த மக்களின் குடும்ப அட்டை விவரங்களின் அடிப்படையில் 240 பேர் இன்னமும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.


    நிலச்சரிவு கோர தாண்டவம் காரணமாக முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 ஊர்களும் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவுகள் போல மாறி விட்டன. அதோடு இந்த 3 ஊர்களிலும் மண்ணின் ஈரப்பதம் மிக அதிகளவில் இருந்ததால் மீட்பு படையினர் கடும் சவால்களை சந்திக்க நேரிட்டது.

    சூரல்மலை-முண்டகை இடையே பாலம் அமைத்தால்தான் 2 கிராமங்களிலும் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் வீடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து ராணுவத்தினர் இந்த இரு ஊர்களுக்கும் இடையே தற்காலிகமாக 190 அடி நீளம் உள்ள "பெய்லி" எனப்படும் இரும்பு பாலத்தை அமைத்துள்ளனர்.

    அந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் நேற்று மாலை நிறைவு பெற்றது. அதன் வழியாக ராணுவ கன ரக வாகனங்களும், ஆம்புலன்சுகளும் நிலச்சரிவு மிக கடுமையாக ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று சேர்ந்தன.

    நேற்று மாலை மிக அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு ராணுவத்தினர் சென்று சேர்ந்துவிட்டாலும் இரவு தொடங்கி விட்டதால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக காலை முதல் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. ராணுவ வாகனங்கள் பாதிப்புகுள்ளான இடம் அருகே வரை செல்லவசதி செய்யப்பட்டு இருப்பதால் அதிநவீன கருவிகள், எந்திரங்களை எடுத்து சென்று உள்ளனர்.

    குறிப்பாக டிரோன் உதவியுடன் ராடார் மூலம் தேடும் பணி தொடங்கி உள்ளது. அதுபோல நவீன எந்திரங்களை ஆங்காங்கே கொண்டு சென்று பூமிக்குள் லேசர் மூலம் யாராவது புதைந்து கிடைக்கிறார்களா? என்பதை கண்டறியும் பணியும் தொடங்கி உள்ளது.

    நொறுங்கி கிடக்கும் வீடுகள், மண் மூடி கிடக்கும் பகுதிகளில் லேசர் மூலம் மக்கள் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்று தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அது போல மிகவும் சிக்கலான பகுதிகளுக்கு தீயணைப்பு படையினரும், ராணுவத்தின் சிறப்பு படையினரும் ஒருங்கிணைந்து சென்று தேட தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் இன்று காலை வயநாடு மாவட்டத்தில் கடுமையான சாரல் மழை பெய்தது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா ரெட் அலார்ட் வெளியிட்டுள்ளது. இதனால் 4-வது நாளாக இன்று மீட்பு குழுவினர் கடும் சாவல்களை சந்திக்க நேரிட்டது.

    கடந்த 3 நாட்களாக மனித சக்தி மூலம்தான் மீட்பு பணிகள் நடந்தன. இன்று நவீன எந்திரங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். நிலச்சரிவில் முழுமையாக மண்ணுக்குள் புதைந்த வார்டுகளில் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் மணலை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

    இதற்கிடையே மண்ணில் புதைந்தவர்களில் சிலர் உயிருக்கு போராடிய நிலையில் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அப்படி யாராவது போராடிக் கொண்டு இருக்கிறார்களா? என்பதை அறிவதற்காக முப்படையில் உள்ள மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அதுபோல அண்டை மாநிலங்களில் உள்ள காவல் துறையில் இருக்கும் மோப்ப நாய்களும் வயநாடு மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.


    தமிழகத்தில் இருந்தும் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தங்களுடன் 6 மோப்ப நாய்களை கொண்டு சென்று உள்ளனர். இந்த மோப்ப நாய்களின் உதவியுடன் உயிருக்கு போராடுபவர்களையும், உயிரிழந்தவர்களையும் தேடும் பணி நடந்து வருகிறது.

    தேடும் பணியை முறைப்படி செய்து முடிப்பதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளை 6 மண்டலமாக பிரித்து ராணுவ வீரர்கள் தேடும் பணியை நடத்தி வருகிறார்கள். மண்ணில் புதைந்தவர்களை மீட்பதற்கு முன்னுரிமை கொடுத்து தேடும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே முண்டகை, சூரல்மலை, மேப்பாடி பகுதிகளில் வசித்தவர்களில் 466 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்று கேரள மாநில அரசு கருதுகிறது. இவர்களில் 316 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீத முள்ள 150 பேர் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    சூரல்மலை, முண்டகை ஆகிய 2 பஞ்சாயத்துகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுமார் 5 ஆயிரம் பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மற்றொரு பஞ்சாயத்தான மேப்பாடி பஞ்சாயத்தில் சுமார் 200 வீடுகள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன. நேற்று மாலை வரை மனிதசக்தி மூலம் மட்டும் மணலை அகற்றும் பணி நடந்தது.

    இன்று காலை இந்த கிராம பஞ்சாயத்தில் மண்ணுக்குள் புதைந்துள்ள 200 வீடுகளையும் அகற்றுவதற்கு நவீன எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. எனவே இந்த வீடுகளுக்குள் மேலும் பலர் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.

    மீட்கப்படும் உடல்கள் உடனுக்குடன் பரிசோதனை செய்யப்படுகின்றன. அடையாளம் காணப்பட்டு விட்டால் அவற்றை உறவினர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

    நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. பல உடல்கள் சிதைந்துள்ளன. இதனால் உறவுகளை இழந்துள்ள இந்த 3 கிராம மக்களின் சொந்தங்கள் கடும் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    உடல்களை அடையாளம் காண மருத்துவமனைகளில் மக்கள் குவிந்த வண்ணம் இருப்பதால் அங்குள்ள காட்சிகள் கண்ணீரை வர வழைப்பதாக இருக்கிறது. அதுபோல 82 முகாம்களில் உள்ள சுமார் 9 ஆயிரம் பேரும் உடமைகள், உறவுகளை இழந்து தொடர்ந்து பரிதவிக்கும் பரிதாபத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே மீட்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ராணுவம், போலீஸ், தீயணைப்பு படை வீரர்களின் ஒருங்கிணைந்த மீட்பு படையினருடன் தற்போது வயநாடு பகுதிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பொதுமக்களும் நிலச்சரிவு பகுதிகளுக்கு சென்று தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக நிலச்சரிவு ஏற்பட்டால் ஓரிரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குதான் பாதிப்பு இருக்கும்.

    தற்போது 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாதிப்பு இருப்பதாலும் நூற்றுக்கணக்கானவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பக்கத்து மாவட்டம் வரை உடல்கள் சென்று விட்டதாலும் தேடும் பணியை பொதுமக்கள் உதவியுடன் கேரள மாநில அரசு விரிவுப்படுத்தி உள்ளது.

    மீட்பு பணிகள் எப்போது நிறைவு பெறும் என்று சொல்ல இயலாத அளவுக்கு பேரிடர் அளவு உள்ளது. ராணுவத்தை சேர்ந்த மீட்பு குழுவினர் நவீன எந்திரங்களை பயன்படுத்த தொடங்கி இருப்பதால் மீட்பு பணிகள் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×