என் மலர்
இந்தியா

மூதாட்டியை டிஜிட்டல் கைது செய்ததாக கூறி ரூ.20 கோடி மோசடி
- போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மும்பை:
மும்பையில் வசித்து வரும் 86 வயது மூதாட்டியை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீஸ் அதிகாரி எனக்கூறி ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் மூதாட்டியின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் அதிகளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறினார். மேலும் அதற்காக மூதாட்டி மற்றும் அவரது மகள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக மிரட்டினார். இதேபோல மூதாட்டியை டிஜிட்டல் கைது செய்து இருப்பதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டியிடம் மேலும் சிலர் அதிகாரிகள் எனக்கூறி பேசினர்.
அந்த கும்பல் வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாக கூறி மூதாட்டியிடம் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த 5-ந்தேதி வரை ரூ.20 கோடி வரை பறித்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் ஏமாற்றப்படுவது குறித்து அறிந்த மூதாட்டி இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது மோசடியில் மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த ஷயான் ஜமீல் சேக்(20), மிரா ரோட்டை சேர்ந்த ரஜிக் அசாம் பட்டிற்கு(20) தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.