search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    7-வது கட்ட ஓட்டுப்பதிவுக்கு 57 தொகுதிகளில் நாளை தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
    X

    7-வது கட்ட ஓட்டுப்பதிவுக்கு 57 தொகுதிகளில் நாளை தேர்தல் பிரசாரம் ஓய்கிறது

    • மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக சமீபத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.
    • கடந்த இரு வாரங்களாக அனல் பறக்கும் வகையில் பிரசாரம் நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்து வரும் தேர்தலில் இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து உள்ளது.

    கடந்த மாதம் 19, 26, கடந்த 7, 13, 20, 25-ந்தேதிகளில் முதல் 6 கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

    முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவீதம், 2-ம் கட்ட தேர்தலில் 66.71 சதவீதம், 3-ம் கட்ட தேர்தலில் 65.68 சதவீதம், 4-ம் கட்ட தேர்தலில் 69.16 சதவீதம், 5-ம் கட்ட தேர்தலில் 62.20 சதவீதம், 6-ம் கட்ட தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    7-வது இறுதி கட்ட தேர்தல் வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 57 தொகுதிகளில் அன்று ஓட்டுப்பதிவு நடைபெறும். இந்த 57 தொகுதிகளும் பீகார் (8), இமாச்சல பிரதேசம் (4), ஜார்க்கண்ட் (3), ஒடிசா (6), பஞ்சாப் (13), உத்தரபிரதேசம் (13), மேற்கு வங்காளம் (9), ஆகிய 7 மாநிலங்களில் உள்ளன. சண்டிகார் யூனியன் பிரதேசத்துக்கும் அன்று தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    இந்த 57 தொகுதிகளிலும் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    7-வது கட்ட தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியும் உள்ளது. 3-வது முறையாக இந்த தொகுதியில் களம் இறங்கி இருக்கும் பிரதமர் மோடி இந்த தடவை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று ஆதரவு திரட்டி வருகிறார்.

    மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக சமீபத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். அந்த தொகுதி தேர்தல் முடிவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த 57 தொகுதிகளிலும் கடந்த 17-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த இரு வாரங்களாக அனல் பறக்கும் வகையில் பிரசாரம் நடந்து வருகிறது. 57 தொகுதிகளிலும் நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய இருக்கிறது.

    அந்த வகையில் ஆதரவு திரட்ட சில மணி நேரங்களே அவகாசம் இருப்பதால் 57 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுலும் போட்டி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (புதன்கிழமை) அவர்கள் இருவரும் ஒடிசாவில் ஒரே பகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

    நாளை (வியாழக்கிழமை) பிரதமர் மோடி வாரணாசியில் பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளார்.

    Next Story
    ×