என் மலர்
இந்தியா

இந்திரா காந்தியால் கூட.. பாகிஸ்தானின் மதவெறி மனநிலை குறித்து மக்களவையில் ஜெய்சங்கர் பேச்சு
- ஹோலி பண்டிகையில் வண்ணம் பூசி விளையாடும் மாணவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கடத்தி மதம் மாற்றியது தொடர்பானது.
பாகிஸ்தானில் மத சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார். ஜெய்சங்கர்
இன்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், பாகிஸ்தானில் இந்து, சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் அகமதியா சமூக மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வருகின்றன. பிப்ரவரி மாதத்தில், இந்துக்கள் மீது 10 கடுமையான தாக்குதல்கள் நடந்தன.
இவற்றில் கடத்தல், கட்டாய மதமாற்றம் மற்றும் ஹோலி பண்டிகையில் வண்ணம் பூசி விளையாடும் மாணவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை போன்ற சம்பவங்களும் அடங்கும்.
சீக்கிய சமூகத்தினருக்கு எதிராகவும் 3 அத்துமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. முதல் சம்பவத்தில் ஒரு சீக்கிய குடும்பம் தாக்கப்பட்டது. மற்றொரு நிகழ்வில் ஒரு பழைய குருத்வாராவை மீண்டும் திறந்ததற்காக ஒரு சீக்கிய குடும்பம் அச்சுறுத்தப்பட்டது.
மேலும் ஒரு சம்பவம் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கடத்தி மதம் மாற்றியது தொடர்பானது. அகமதியா சமுதாய மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. ஒரு வழக்கில் ஒரு மசூதிக்கு சீல் வைக்கப்பட்டது.
மற்றொரு வழக்கில் 40 கல்லறைகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. மன நிலை சரியில்லாத கிறிஸ்தவர் ஒருவர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் அரசு தனது நாட்டில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்கு எந்த உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதா? என்று உத்தவ் சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட நாடாக தனது பங்கை வகிக்கிறது, ஆனால் வேறு எந்த நாட்டின் மதவெறி மனநிலையையும் மாற்ற முடியாது. இந்திரா காந்தியால் கூட இதைச் செய்ய முடிந்திருக்காது என்று தெரிவித்தார்.