என் மலர்
இந்தியா

ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது மற்றொரு வழக்குப்பதிவு
- ஆம் ஆத்மி அமைச்சர்கள் மீது மதுபான ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது.
- மற்றொரு அமைச்சரான சத்யேந்திர ஜெயின் மீதும் சில வழக்குகள் உள்ளன.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது முதல் மந்திரியாக இருந்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல் மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது ஏற்கனவே மதுபான ஊழல் வழக்கு உள்ளது. அதுபோல் அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் மீதும் சில வழக்குகள் உள்ளன.
இதற்கிடையே, ஆம் ஆத்மி ஆட்சியின்போது பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதில் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி நடந்தது தொடர்பாக, முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, முன்னாள் மந்திரி சத்யேந்திர ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் ரூ.571 கோடி செலவில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தும் திட்டத்திற்காக லஞ்சம் பெற்றதாக சத்யேந்திர ஜெயின் மீது மற்றொரு ஊழல் வழக்கை டெல்லி அரசின் ஊழல் தடுப்பு போலீசார் பதிவு செய்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்தும் திட்டத்தை டெண்டர் எடுத்த நிறுவனம், உரிய காலத்திற்குள் அந்தப் பணிகளை முடிக்காததால் ரூ.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை தள்ளுபடி செய்வதற்காக ரூ.7 கோடியை சத்யேந்திர ஜெயின் லஞ்சமாக பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2023, மே மாதம் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.