என் மலர்
இந்தியா
வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இன்று மாலத்தீவு பயணம்
- இன்று முதல் 11-ந்தேதி வரை மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்வார்.
- மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்திக்கிறார்.
புதுடெல்லி:
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் 3 நாட்கள் பயணமாக இன்று மாலத்தீவுக்கு செல்கிறார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இன்று முதல் 11-ந்தேதி வரை மாலத்தீவுக்கு பயணம் மேற்கொள்வார்.
இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த ஜெய்சங்கரின் பயணம் நோக்கமாக உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது மற்றும் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயப்படும் என்று தெரிவித்தது. ஜெய்சங்கர் தனது பயணத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்திக்கிறார்.
மேலும் மாலத்தீவின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேசுகிறார். இதில் ஒப்பந்தங்கள் கையெழுத்ததாக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலத்தீவில் அதிபராக பதவியேற்றவுடன் முகமது முய்சு தனது நாட்டில் உள்ள இந்திய படைகளை வெளியேற உத்தரவிட்டார். சீன ஆதரவாளரான அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்.
மேலும் இந்திய பிரதமர் மோடியை மாலத்தீவு மந்திரிகள் விமர்சனம் செய்தனர். இதையடுத்து இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் தவிர்த்தனர். இதனால் அந்நாட்டு பொருளாதாரம் கடுமையாக பாதித்தது.
இதையடுத்து இந்திய எதிர்ப்பு நிலையை அதிபர் முகமது முய்சு கைவிட்டார். அவர் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரின் மாலத்தீவு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.