என் மலர்
இந்தியா

சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார் தல்லேவால்: உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தகவல்
- விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்.
- மருத்துவ உதவிகள் வழங்க உச்சநீதிமன்றம் பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
பஞ்சாப் மாநிலத்தில விவசாயிகளின் தலைவர் ஜெக்ஜித சிங் தல்லேவால், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினார். இந்த நிலையில் இன்று தண்ணீர் உட்கொண்டு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என். கோட்டீஸ்வர் சிங் தலைமையிலான பெஞ்ச் முன்பு, பஞ்சாப் மாநில அட்வகேட் ஜெனரல் புர்மிந்தர் சிங், பஞ்சாப் அரசு கனௌரி மற்றும் ஷம்பு எல்லைகளில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தியுள்ளோம். தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்டுள்ள எனத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், தல்லேவால் முயற்சிகளை வெகுவாக பாராட்டினர். மேலும், அரசியல் நோக்கம் இல்லாத ஒரு உண்மையான விவசாயிகளின் தலைவர் எனத் தெரிவித்தனர்.
அத்துடன் "விவசாயிகளின் குறைகளை தீர்க்க சிலர் விரும்பவில்லை என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் ஐவரி டவர் மீது உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை. எல்லாம் எங்களுக்கு தெரியும்" என்றனர்.
மேலும், "களத்தில் நிலவும் நிலைமை குறித்து பஞ்சாப் மற்றும் அரியானா மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விவசாயிகள் குறைகளை கவனிக்க குழு அமைக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
தல்லேவாலுக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பஞ்சாப் மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜபி ஆகியோருக்கு எதிரான நீதிமன்ற அவதிப்பு நடவடிக்கையை நீதிமன்றம் கைவிட்டது.
கடந்த 19-ந்தேதி மத்திய அரசு குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பிய சர்வான் சிங் பந்தேர், தல்லேவால் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் தலைவர்களை மொகாலியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அத்துடன் ஷம்பு மற்றும் கனௌரி போராட்டப் பகுதியில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தினர்.
டெல்லியை நோக்கி விவசாயிகள் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் பேரணி செல்ல முடிவு செய்தனர். ஆனால் பாதுகாப்புப்படையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால் ஷம்பு மற்றும் கனௌரி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.