என் மலர்
இந்தியா
படப்பிடிப்பில் பங்கேற்ற யானை காட்டுக்குள் தப்பியோடியது- வனக்குழுவினரின் தீவிர தேடுதலால் கண்டுபிடிக்கப்பட்டது
- படப்பிடிப்பின் மோது யானைகளுக்குள் மோதல் ஏற்பட்டது.
- பொது மக்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழுவினர் யானையை கண்டுபிடிக்க வனப்பகுதிக்குள் சென்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலத்தில் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. குட்டப்புழா வனப் பகுதியை ஒட்டிய பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.
கதையின்படி 5 யானைகள் மோதுவது போன்ற சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. புதுப்பள்ளி சாது, தடாதவிளை மணிகண்டன் உள்ளிட்ட 5 யானைகள் பயன்படுத்தப்பட்டன. புதுப்பள்ளியை சேர்ந்த வர்கீஸ் என்பவருக்கு சொந்தமான சாது யானை, மிகவும் அமைதியான சுபாவம் கொண்டது.
திருச்சூர் பூரம் உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான கோவில் திருவிழாக்களில் பங்கேற்றதன் மூலம் யானை சாது பிரபலமானதாகும். இந்தநிலையில் தான் அந்த யானை படப்பிடிப்பில் பங்கேற்றது. படப்பிடிப்பின் மோது யானைகளுக்குள் மோதல் ஏற்பட்டது.
யானைகளின் அங்கி மிங்கும் ஓடியபடி மோதிக் கொண்டதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த கேமராக்கள் உள்ளிட்டவைகள் உடைந்து சேதமடைந்தன. மேலும் படப்பிடிப்பில் பங்கேற்றிருந்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் உயிர் தப்புவதற்காக சிதறி ஓடினர்.
இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மோதலின் போது மணிகண்டன் உள்ளிட்ட மற்ற யானைகள் பாகன்களின் உத்தரவை கடைபிடிக்காமல் சாது யானையை தாக்கின. இதனால் பயந்துபோன அந்த யானை, அருகில் இருந்த வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.
சாது யானை ஓடிய வனப்பகுதி காட்டு யானைகள் நடமாடும் பகுதியாகும். இதனால் படக்குழுவினர் வனப்பகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆகவே வனப்பகுதிக்குள் ஓடிய யானையை கண்டுபிடிக்க வனத்துறையினரின் உதவி நாடப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனச்சரகர் உள்ளிட்ட ஏராளமான வனத்துறையினர் வந்தனர். வனத்துறையினர், யானை பாகன்கள் மற்றும் பொது மக்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழுவினர் யானையை கண்டுபிடிக்க வனப்பகுதிக்குள் சென்றனர்.
அவர்கள் யானையை தேடும் பணியில் விடிய விடிய தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் வனப்பகுதிக்குள் ஓடிய யானை சாது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. அதனை வனப்பகுதிக்குள் இருந்து பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர்.