என் மலர்
இந்தியா

நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி

- அமலாக்கத்துறையினர் ரன்யா ராவ், அவரது கணவர் ஜதீன், நண்பர் தருண் ராஜு வீடுகளில் சோதனை நடத்தி இருந்தார்கள்.
- தங்கம் கடத்தி வந்த போது, ரன்யா ராவை எந்தவிதமான சோதனையும் இன்றி போலீஸ்காரர் பசவராஜ் வெளியே அழைத்து வந்திருந்தார்.
பெங்களூரு:
கன்னட நடிகையான ரன்யா ராவ், தங்கம் கடத்தல் வழக்கில் கடந்த 3-ந்தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள், அவரை கைது செய்து 14 கிலோ 800 கிராம் தங்கத்தை மீட்டு இருந்தார்கள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவலின்பேரில் ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜு கைது செய்யப்பட்டார்.
அவரை காவலில் எடுத்து வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அவரது காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, நேற்று காலையில் பெங்களூரு பொருளாதார சிறப்பு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் முன்வராததால், நீதிமன்ற காவலில் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் தருண் ராஜு அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே தங்கம் கடத்தலில் ரன்யா ராவும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கோரி, அவர் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த 12-ந்தேதியே முடிந்திருந்தது. அன்றைய தினம் ரன்யா ராவின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை 14-ந்தேதி (அதாவது நேற்று) வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி, அந்த மனு மீதான தீர்ப்பை நேற்று நீதிபதி கூறினார்.
அப்போது ரன்யா ராவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார். ரன்யா ராவ் சிறையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், தங்கம் கடத்தல் வழக்கில் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாலும், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதால், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் ரன்யா ராவ், அவரது கணவர் ஜதீன், நண்பர் தருண் ராஜு வீடுகளில் சோதனை நடத்தி இருந்தார்கள். சில முக்கிய ஆவணங்கள் கிடைத்திருந்தாலும், தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் இருக்கும் நபர்கள், தங்கத்தை வாங்கியவர்கள் பற்றிய தகவல்கள் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. இதனால் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடிக்க சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், துபாயில் இருந்து நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தி வந்தபோது, பெங்களூரு போலீசார் விதிமுறைகளை மீறி இருந்தது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதாவது ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையும், டி.ஜி.பி.யுமான ராமசந்திரா ராவ் உத்தரவின்பேரில், தங்கம் கடத்தி வந்த போது, அவரை எந்தவிதமான சோதனையும் இன்றி போலீஸ்காரர் பசவராஜ் வெளியே அழைத்து வந்திருந்தார். அதுபற்றி மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கவுரவ் குப்தா தலைமையில் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி கவுரவ் குப்தா, டி.ஐ.ஜி. வம்சி கிருஷ்ணா மற்றும் அதிகாரிகள் சென்றார். 2-வது முனையத்தில் ரன்யா ராவ் எந்த வழியாக தங்கம் கடத்தி வந்தார்?, அவரை போலீஸ்காரர் பசவராஜ் எப்படி அழைத்து வந்தார்?, சுங்கத்துறை அதிகாரிகளிடம் ரன்யா ராவை அழைத்து வருவதற்கு அவர் கூறிய காரணம் என்ன? உள்ளிட்டவை குறித்து கவுரவ் குப்தா அதிகாரிகளிடம் விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டார்.
அதே நேரத்தில் கடந்த 3-ந்தேதி தங்கம் கடத்தி வந்தபோது, விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பதை அறிந்து கொள்ள, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஐ.ஏ.எஸ். அதிகாரி கவுரவ் குப்தா பெற்றுள்ளார். விசாரணையை முடித்துவிட்டு அவர் தலைமையிலான அதிகாரிகள் பெங்களூருவுக்கு புறப்பட்டனர்.