search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வருகிற 21-ந்தேதி விவசாயிகள் ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி பேரணி
    X

    வருகிற 21-ந்தேதி விவசாயிகள் ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி பேரணி

    • ஷம்பு எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • ஒரு குழு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு. மற்றொரு குழு டெல்லி நோக்கி பேரணி நடத்த முடிவு.

    101 விவசாயிகளை கொண்ட குழு வருகிற 21-ந்தேதி பஞ்சாப் மாநிலம் அரியானா எல்லையில் உள்ள ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி பேரணியை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    விவசாயப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாய விலைக்கு சட்ட உத்தரவாதம் உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைளை ஏற்க வேணடும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக இந்த பேரணியை தொடங்குகின்றனர். கிசான் மஸ்தூர் மோர்ச்சா விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பந்தர் இதை தெரிவித்துள்ளார்.

    விவசாயிகளின் கோரிக்கைளை நிறைவேற்றும் வகையில் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில எல்லையான ஷம்பு உள்ளிட்ட எல்லைகளில் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை.

    மத்திய அரசை கண்டித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி, 8-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய மூன்று முறை ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி செல்ல முயன்றனர். ஆனால் அரியானாவில் பாதுகாப்புப்படை அவர்களை தடுத்து நிறுத்தியது.

    விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உண்ணாவிரதம் இன்றோடு 52-வது நாளை எட்டியுள்ளது. அவருக்கு ஆதரவாக நேற்று கிசான் மஸ்தூர் மோர்ச்சா விவசாய சங்கத்தின் 111 விவசாயிகள் கொண்ட குழு கனௌரி எல்லை அருகே அரியானா பக்கத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் 101 விவசாயிகள் கொண்ட குழு டெல்லி நோக்கி பேரணி செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஷம்பு மற்றும் கனௌரி எல்லையில் விவசாயிகள் கடந்த 11 மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை. மத்திய அரசு எங்களுடன் பேசத் தயாராகவில்லை. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம் என கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர் சர்வான் சிங் பாந்தர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×