என் மலர்
இந்தியா
கேரளாவில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்: 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
- திருவனந்தபுரம் நகர் மற்றும் கொச்சியில் பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் அதிகமாக காணப்பட்டது
- கனமழைக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேராடு சாய்ந்தள்ளது. வீடுகளும் இடிந்துள்ளன.
திருவனந்தபுரம்:
தென்தமிழகத்தில் புயல் சுழற்சியின் தாக்கத்தால் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. நேற்று மாநிலம் முழுவதும் பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை பெய்தது.
திருவனந்தபுரம் நகர் மற்றும் கொச்சியில் பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் அதிகமாக காணப்பட்டது. இதனால் அந்த வழியே சென்ற இரு சக்கர வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. திருவனந்தபுரம் சாக்காவில் காலை முதல் தண்ணீர் தேங்கி நின்றதால், கார், ஆட்டோக்கள் போன்றவை சாலையை கடக்க முடியாமல் திணறின.
இதே நிலைதான் கொச்சி எம்.ஜி.ஆர். சாலை, பத்தனம்திட்டா உள்பட பல பகுதிகளிலும் காணப்பட்டது. புயல் சுழற்சியின் காரணமாக மாநிலம் முழுவதும் வருகிற 18-ந் தேதி வரை மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேராடு சாய்ந்தள்ளது. வீடுகளும் இடிந்துள்ளன. ஆனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மழையின் காரணமாக பல இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மீனவர்கள் மற்றும் கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கடற்கரைக்கு செல்லவும் படகு சவாரி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.