என் மலர்
இந்தியா

சிம்லாவில் தேர்தல் முடிவை காண திரண்டிருக்கும் தொண்டர்கள்
இழுபறி நிலை மாறியது... இமாச்சல பிரதேசத்தில் பாஜகவை முந்தியது காங்கிரஸ்

- இமாச்சல பிரதேசத்தில் 35 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியால் ஆட்சி அமைக்க முடியும்.
- 12 மணிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை
சிம்லா:
இமாச்சல பிரதேசத்தில் 68 இடங்களை கொண்ட சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 76.44 சதவீத வாக்குகள் பதிவானது.
அந்த மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவியது. தேர்தலுக்குரிய கருத்துக் கணிப்புகளில் அங்கு ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் இழுபறி காணப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
கருத்துக் கணிப்புகளை உறுதிபடுத்துவது போல இன்று ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அமைந்தன. இன்று காலை 8 மணிக்கு இமாச்சல பிரதேசத்தில் 59 இடங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜனதாவும், காங்கிரசும் மாறி, மாறி முன்னிலை பெற்றன.
மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 35 இடங்கள் கைப்பற்றும் கட்சியால்தான் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் இந்த மேஜிக் எண்ணை எட்டுவதற்கு இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது.
ஒருகட்டத்தில் பா.ஜனதா 34 இடங்களில் முன்னிலை பெற்றது. அடுத்த சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் கட்சியும் 34 இடங்களில் முன்னிலை பெற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
காலை 10 மணி அளவில் பா.ஜனதா 30 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று இருந்தது. எனவே காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. 10.30 மணி அளவில் மீண்டும் முன்னிலையில் மாற்றம் ஏற்பட்டது. இந்த தடவை பா.ஜனதா கட்சி 35 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. 11 மணிக்கு பிறகும் இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை அடைந்தன. எனவே, ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்பதில் கடும் இழுபறி நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 12 மணிக்குப் பிறகு நிலைமை மாறி, காங்கிரசின் கை ஓங்கியது. காங்கிரஸ் கட்சி 38 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 27 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெறும் நிலை உள்ளதால், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.