என் மலர்
இந்தியா

ஹோலி கொண்டாட்டம்: 7 பள்ளி மாணவிகள் மீது ரசாயன பொடி வீசிய கும்பல் - கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை

- பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.
- 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது
நாடு முழுவதும் நேற்று இந்துமத பண்டிகையான ஹோலி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது ரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.
அந்நேரத்தில் பஸ் வந்ததால் மாணவிகள் உடனே பஸ்ஸில் ஏறினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று பஸ்ஸில் ஏறி அந்த 7 மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடியை பூசியுள்ளது. அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம், முட்டை, ஃபீனைல் மற்றும் பிற இரசாயனங்கள் கலந்திருந்தாக கூறப்படுகிறது.
இதனால் 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சிறுமிகளின் பெற்றோர் பதறியடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்தனர்.
7 பேரில் 4 மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக கடக் GIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மற்ற மூவர் உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெற்றோர் மற்றும் அவ்வூர் மக்கள் இடையே கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. வண்ணம் பூசிவிட்டு பைக்கில் தப்பியோடிய அந்த கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.