என் மலர்
இந்தியா

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.ஐ.டி. பாபா

- போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு.
- அவர் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட பிறகு பிரபலமான ஐ.ஐ.டி. பாபா கஞ்சா வழக்கில் கைதான சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர் மீது போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி. பாம்பேயில் பட்டம் பெற்ற அபய் சிங் (ஐ.ஐ.டி. பாபா) மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட பிறகு பிரபலமடைந்தார். உண்மையை தேடிய பயணத்தால் ஆன்மிகத்தில் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்த அபய் சிங் பிறகு ஐ.ஐ.டி. பாபாவாக உருவெடுத்தார்.
இந்த நிலையில், ஜெய்ப்பூரை அடுத்த ரித்தி சித்தி பகுதியில் செயல்பட்டு வரும் ஓட்டல் ஒன்றில் ஐ.ஐ.டி. பாபா பிரச்சினை செய்வதாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ஐ.ஐ.டி. பாபாவை கைது செய்து, அவர் வைத்திருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
நிர்ணயிக்கப்பட்டதை விட குறைந்த அளவில் கஞ்சா வைத்திருந்ததை அடுத்து ஐ.ஐ.டி. பாபா மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், பிறகு அவரை ஜாமினில் விடுவித்தனர்.
இது குறித்து பேசிய ஐ.ஐ.டி. பாபா, "நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்த காவல் துறையினர் என்னை கைது செய்தனர். அவர்களுக்கு நான் பிரச்சினை செய்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததாக என்னிடம் கூறினர். அந்த காரணம் எனக்கு வினோதமாக இருந்தது. கும்பமேளாவில் ஒவ்வொரு பாபாவும் கஞ்சாவை பிரசாதமாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவரையும் கைது செய்வீர்களா?" என்று கூறினார்.