என் மலர்
இந்தியா

சிம்பொனி அரங்கேற்றம் செய்த 'இசைஞானி' இளையராஜா எம்.பி.க்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு
- இன்று பிரதமர் மோடியை சந்தித்து இசைஞானி இளையராஜா வாழ்த்துப் பெற்றார்.
- சிம்பொனி குறித்து இளையராஜாவிடம் உரையாற்றியதாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.
சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை சந்தித்து இசைஞானி இளையராஜா வாழ்த்துப் பெற்றார். சிம்பொனி குறித்து இளையராஜாவிடம் உரையாற்றியதாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து மாநிலங்களைவை எம்.பி.யான இளையராஜா மாநிலங்களவையில் பங்கேற்றார்.
அப்போது, சிம்பொனி அரங்கேற்றம் செய்த இளையராஜாவை பாராட்டிய மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், "சிம்பொனியை இசையமைத்து, பதிவு செய்து, அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். அவரால் ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது" என்று தெரிவித்தார்.