என் மலர்
இந்தியா
ஓடும் ரெயிலில் 3 பயணிகளை எரித்து கொன்ற வழக்கு: கைதான வாலிபருக்கு 11 நாள் போலீஸ் காவல்
- 14 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு செய்தனர்
- பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் சென்ற ரெயிலில் கடந்த 2-ந் தேதி பயணிகள் மீது வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
இதில் 3 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய வாலிபர் மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கேரள போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த வாலிபரை மகாராஷ்டிரா அதிரடி படை போலீசார் ரத்தினகிரியில் கைது செய்தனர். கைதான வாலிபரின் பெயர் ஷாருக் ஷெய்பி (வயது 24). ரத்தினகிரியில் இருந்து கேரளா கொண்டு வரப்பட்ட ஷாருக் ஷெய்பிக்கு மஞ்சள் காமாலை நோய்பாதிப்பு ஏற்பட்டது.
எனவே அவரை போலீசார் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஷாருக் ஷெய்பி நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடனே அவரை போலீசார் கோழிக்கோடு முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அங்கு அவரை 14 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு செய்தனர். மனுவை விசாரித்த கோர்ட்டு ஷாருக் ஷெய்பியை 11 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து போலீசார் ஷாருக் ஷெய்பியை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.