என் மலர்
இந்தியா
காஷ்மீரில் ரூ.2,700 கோடியில் 12 கி.மீ. நீளமுள்ள பிரமாண்ட சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
- சுரங்கப்பாதையின் சாதனை பணியில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளர்களையும் சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
- சுரங்கப்பாதை பற்றிய விவரங்களை அதிகாரிகளுடன் கேட்டறிந்து சுரங்கப் பாதையில் பயணம் மேற்கொண்டார்.
ஸ்ரீநகா்:
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகா்-காா்கில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 12 கி.மீ. நீளமுள்ள சோனாமாா்க் சுரங்கப்பாதை ரூ.2,700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
இதில் 6.4 கிலோ மீட்டர் நீளமுள்ள சோனாமார்க் பிரதான சுரங்கப்பாதை பிரமாண்டமாக இசட் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் வெளியேறும் சுரங்கப்பாதை மற்றும் அணுகுமுறை சாலைகளை உள்ளடக்கியது. கடல் மட்டத்தில் இருந்து 8,650 அடி உயரத்தில் அமைந்துள்ள இது, ஸ்ரீநகர் மற்றும் சோனாமார்க் இடையே லே வரை செல்லும் அனைத்து வானிலைக்கும் ஏற்ற தொடர்பையும் மேம்படுத்தும்.
நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு வழிகளைத் தவிர்த்து, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த லடாக் பகுதிக்கு பாதுகாப்பான மற்றும் தடையின்றி அணுகலை உறுதி செய்யும். இது சோனாமார்க்கை ஆண்டு முழுவதும் செல்லும் இடமாக மாற்றி, குளிர்கால சுற்றுலா, சாகச விளையாட்டுகள் மற்றும் உள்ளூர் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்தும்.
2028-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படவுள்ள ஜோஜிலா சுரங்கப்பாதையுடன், இது பாதையின் நீளத்தை 49 கி.மீ. முதல் 43 கி.மீ. வரை குறைத்து, வாகனத்தின் வேகத்தை மணிக்கு 30 கி.மீ. முதல் 70 கி.மீ. வரை அதிகரிக்கும். ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் இடையே தடையற்ற தேசிய நெடுஞ்சாலை-1 இணைப்பை உறுதி செய்யும்.
இந்த மேம்படுத்தப்பட்ட இணைப்பு ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் முழுவதும் பாதுகாப்பு தளவாடங்கள், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக-கலாச்சார ஒருங்கிணைப்பை அதிகரிக்கும்.
இந்த சுரங்கப்பாதையில் அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் ஒரு மணி நேரத்தில் 1000 வாகனங்கள் செல்லலாம். இமயமலையை குடைந்து இந்த பிரமாண்ட சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று இந்த வரலாற்று சிறப்பு மிக்க சோனாமார்க் சுரங்கப்பாதையை தொடங்கிவைத்து நாட்டுக்கு அா்ப்பணித்தார்.
முன்னதாக சுரங்கப்பாதை பற்றிய விவரங்களை அதிகாரிகளுடன் கேட்டறிந்து சுரங்கப் பாதையில் பயணம் மேற்கொண்டார்.
இந்த சுரங்கப்பாதையின் சாதனை பணியில் ஈடுபட்ட கட்டுமானத் தொழிலாளர்களையும் சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றினார். மத்திய மந்திரி நிதின்கட்கரி, கவர்னர் மனோஜ் சின்கா, முதல்-மந்திரி உமர் அப்துல்லா ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
பிரதமரின் வருகையையொட்டி, சோன்மாா்க் உள்பட ஜம்மு-காஷ்மீா் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. ராணுவம், ஜம்மு-காஷ்மீா் போலீசார், துணை ராணுவப் படைகளுடன் ஒருங்கிணைந்து பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புக் குழு (எஸ்பிஜி) இதற்கான ஏற்பாடுகளை செய்தது.
#WATCH | Sonamarg, Jammu & Kashmir: Prime Minister Narendra Modi inaugurated the Z-Morh tunnel
— ANI (@ANI) January 13, 2025
CM Omar Abdullah, LG Manoj Sinha and Union Minister Nitin Gadkari were also present.
(Source: DD/ANI) pic.twitter.com/kS3jjgonfK