search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு கட்சிகள் ஆதரவு
    X

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு கட்சிகள் ஆதரவு

    • மசோதா வர வேண்டும், வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும்- ஜேடியு தலைவர்.
    • அரசிற்கு ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும் வேண்டிய தேவை உள்ளது- தெலுங்கு தேசம் எம்.பி.

    மத்திய அரசு பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவுக்கு பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ள முக்கியமான இரு கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ் குமார்), தெலுங்குதேசம் கட்சி (சந்திரபாபு நாயுடு) ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.

    வக்பு வாரிய செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதுதான் இதன் நோக்கம். மசூதிகளை நடத்துவதில் தலையீட முயற்சி இல்லை எனத் தெரிவித்துள்ளன.

    மக்களவையில் ஆளுங்கட்சியால் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ரஞ்சன் சிங், இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என உறுதியளித்தார்.

    மேலும், "வக்பு வாரிய சட்டத் திருத்தம் முஸ்லீம்களுக்கு எதிரானது என பல உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இது எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானது?. இங்கே அயோத்தியின் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலையும் ஸ்தாபனத்தையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதா?. இது மசூதிகளில் தலையிடும் முயற்சி அல்ல.

    வக்ஃப் வாரியம் எப்படி உருவாக்கப்பட்டது? அது ஒரு சட்டத்தின் மூலம். சட்டத்தின் மூலம் நிறுவப்படும் எந்த நிறுவனமும் எதேச்சதிகாரமாகிறது. வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வர அரசுக்கு உரிமை உள்ளது. இதில் வகுப்புவாத பிளவு இல்லை. எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றனர். மசோதா வர வேண்டும், வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும்" என்றார்.

    தெலுங்குதேசம் கட்சி எம்.பி. ஜி.எம். ஹரிஷ் பாலயோகி "நன்கொடையாளர்களின் நோக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். நோக்கமும் அதிகாரமும் தவறாகப் பயன்படுத்தப்படும்போது, சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதும், வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

    அரசிற்கு ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும் வேண்டிய தேவை உள்ளது. அதற்காக மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. நாங்கள் அதை ஆதரிக்கிறோம். நாட்டின் ஏழை முஸ்லிம்கள் மற்றும் பெண்களுக்கு உதவும் என்றும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

    விரிவான ஆலோசனைகள் தேவைப்பட்டால், அதைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றார்.

    வக்பு வாரியம்

    நீண்ட காலத்துக்கு முன்பு முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துக்களை இறைவனுக்கு தானமாக வழங்கினர். இத்தகைய சொத்துக்கள் 'வக்பு சொத்துக்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

    இந்த சொத்துக்களை பராமரிக்க 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்பு வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்பு சொத்துக்களை நிர்வகித்து வருகின்றன.

    நாடு முழுவதும் வக்பு வாரியத்துக்கு 9.40 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. அதில் 8 லட்சத்து 72 ஆயி ரத்து 292 சொத்துகள் இருக்கின்றன. அந்த சொத்துக்களை வக்பு வாரியம் பராமரித்து வருகிறது. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    வக்பு வாரியத்தின் கீழ் மாவட்ட வக்பு குழுக்கள் செயல்படுகின்றன. குறிப்பாக வக்பு சொத்துக்கள் சுமார் 200 பேரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வக்பு வாரியங்களை கண்காணிக்க, வக்பு சட்டத்தின்படி, மத்திய வக்பு கவுன்சில் 1964-ல் தொடங்கப்பட்டது.

    மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின்கீழ் இது இயங்குகிறது. 1954-ல் இயற்றப்பட்ட வக்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு, கடந்த 1995-ம் ஆண்டு புதிய வக்பு சட்டம் இயற்றப்பட்டது.

    இந்நிலையில், வக்பு சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் வல்லுனர்கள், பெண்கள், ஷியா மற்றும் போராஸ் உள்ளிட்ட சில பிரிவினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதன் அடிப்படையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. அதன்படி, வக்பு சட்டத்தில் 44 திருத்தங்களை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

    மத்திய வக்பு கவுன்சில், மாநில வக்பு வாரியங்களில் தலா 2 பெண் உறுப்பினர்கள் இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. மேலும் மத்திய வக்பு கவுன்சிலில் ஒரு மத்திய மந்திரி, 3 எம்.பி.க்கள், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த 3 பிரதிநிதிகள், 3 முஸ்லிம் சட்ட நிபுணர்கள், 2 முன்னாள் நீதிபதிகள் (ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டு), தேசிய அளவில் புகழ்பெற்றவர்கள், மூத்த மத்தியஅரசு ஊழியர்கள் 4 பேர் இடம்பெறுவர்.

    இதில் 2 பேர் கண்டிப்பாக பெண்களாக இருக்க வேண்டும் போன்ற ஷரத்துகள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×