search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இடுக்கி அருகே 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு
    X

    100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப் நொறுங்கி கிடக்கும் காட்சி.

    இடுக்கி அருகே 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து- 3 பேர் உயிரிழப்பு

    • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே போஸ் மற்றும் ரீனா ஆகிய இருவரும் இறந்தனர்.
    • விபத்தில் கணவருடன் பலியாகி இருக்கும் ரீனா, கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனையான பீனாமோலின் சகோதரி ஆவார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி அடிமாலி அருகே உள்ள பன்னியர்குட்டி பகுதியை சேர்ந்தவர் போஸ்(55). இவரது மனைவி ரீனா (வயது48). இவர்கள் இருவரும் நேற்று முள்ளக்காணம் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு ஜீப்பில் சென்றனர்.

    பின்பு இரவில் அங்கிருந்து தங்களின் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஜீப்பை ஆபிரகாம் (50) என்பவர் ஓட்டி வந்தார். பன்னியர்குட்டியில் உள்ள மசூதி அருகே வந்தபோது அவர்களது ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் விழுந்தது.

    இதனை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பார்த்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடம் செங்குத்தான பள்ளத்தாக்கு பகுதி ஆகும்.

    இதனால் அவர்கள் கடும் சிரமத்துக்கு மத்தியில் ஜீப் விழுந்து கிடந்த பகுதிக்கு சென்றனர். ஜீப்புக்குள் சிக்கி படுகாயங்களுடன் கிடந்த போஸ், ரீனா, ஆபிரகாம் ஆகிய 3 பேரையும் மீட்டு பள்ளத்தாக்கில் இருந்து மேலே கொண்டு வந்தனர். பின்பு ஆம்புலன்சு மூலமாக 3 பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே போஸ் மற்றும் ரீனா ஆகிய இருவரும் இறந்தனர். எர்ணாகுளத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆபிரகாம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் கணவருடன் பலியாகி இருக்கும் ரீனா, கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனையான பீனாமோலின் சகோதரி ஆவார். பல ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள அவர், 3 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஒலிம்பிக் வீராங்கனையின் சகோதரி உள்பட 3 பேர் பலியான சம்பவம் இடுக்கியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×