என் மலர்
இந்தியா

உங்களுடைய தலைவர் குண்டுகளை முதலில் எதிர்கொள்வார்: தொண்டர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன்
- எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம்.
- அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். சட்ட விரோத சுரங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராகவில்லை.
8-வது முறையாக அனுப்பியபோது, என்னுடைய வீட்டில் வைத்து விசாரணை நடத்தினால் ஒத்துழைப்பதாக தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அவரது வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப்பின் அவரது வீட்டின் முன் குவிந்திருந்த தொண்டர்கள் மத்தியில் ஹேமந்த் சோரன் பேசினார். அப்போது அவர் கூறுகையில் "எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அந்த சதிகளை நாம் துண்டு துண்டுகளாக்கி வருகிறோம். அவர்களுடைய சவப்பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் நேரம் இது. நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்போம். ஹேமந்த் சோரன் எப்போதும் உங்களுடன் இருப்பான். உங்களுடைய தலைவன் முதலில் குண்டுகளை எதிர்கொண்டு, உங்களுடைய மனஉறுதியை உயர்த்துவான்" என்றார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த சோரன் கைது செய்யப்படலாம். இதனால் அவரது மனைவியை முதலமைச்சாராக்க முயற்சி செய்து வருகிறார் என செய்திகள் பரவிய நிலையில், இந்த செய்தியை திட்டவட்டாக மறுத்து வந்தார் ஹேமந்த் சோரன்.