என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![இன்ஸ்டாவிலோ 20... நேரிலோ 45... வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி இன்ஸ்டாவிலோ 20... நேரிலோ 45... வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி](https://media.maalaimalar.com/h-upload/2024/05/01/2130248-insta.webp)
இன்ஸ்டாவிலோ 20... நேரிலோ 45... வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- இன்ஸ்டாகிராம் மற்றும் போனில் மட்டுமே பேசி வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க திட்டமிட்டனர்.
- தனது காதலி இன்னமும் வரவில்லையே என்று ஏக்கத்தில் அங்கு வெகு நேரம் காத்திருந்தார்.
கான்பூர்:
காதல்கோட்டை படத்தில் நடிகர் அஜித்தும் தேவயானியும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் காதலிப்பார்கள். கிளைமாக்சில் இருவரும் ஒன்று சேர்வார்கள்.
பார்க்காமல் காதல் வந்த காலம் போய், செல்போனில் போட்டோவை பார்த்து பழகும் காலம் தற்போது புது ஸ்டைலாக உள்ளது. ஆனால் போட்டோவில் பார்த்த அழகு நேரில் இல்லாமல் போனால் காதலர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து செல்லும் நிலையும் ஏற்படுகிறது.
இதேபோல் இன்ஸ்டாகிராமில் இளம்வயது பெண்ணின் போட்டோவை பார்த்து அவருடன் பழகிய வாலிபர் ஆனால் நேரில் பார்த்த போது அந்த பெண் வயதான தோற்றத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து அவரை தாக்கியுள்ளார்.
இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் தீபேந்திரா சிங் (வயது 20). இவர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்தார். அதன் மூலம் இளம்பெண் ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.
அந்த பெண் இன்ஸ்டாகிராம் முகப்பு பகுதியில் தன்னுடைய 20 வயது அழகிய போட்டோவை வைத்திருந்தார்.
இந்த போட்டோவை பார்த்து அழகில் மயங்கிய தீபேந்திரா சிங் அந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக பழகினார். அவருடன் காதல் மொழியிலும் பேசி வந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் மற்றும் போனில் மட்டுமே பேசி வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க திட்டமிட்டனர். இதற்கான நாளும் இடமும் குறிக்கப்பட்டது.
தனது அழகான காதலியை சந்திக்க போகிறோம் என்ற ஆர்வத்தில் தீபேந்திரா சிங் மிடுக்கான ஆடை அணிந்து மிகவும் ஆர்வமுடன் துள்ளி குதித்து அங்கு சென்றார். ஆனால் தனது காதலி இன்னமும் வரவில்லையே என்று ஏக்கத்தில் அங்கு வெகு நேரம் காத்திருந்தார்.
அப்போது சுமார் 45 வயது பெண் ஒருவர் அவரிடம் நெருங்கி வந்தார். அந்த பெண்ணை பார்த்த தீபேந்திரா சிங் நீங்கள் யார் என்று அவரிடம் கேட்டார். அப்போது நீங்கள் தீபேந்திரா சிங்கா என்று அந்த பெண் கேட்டார்.
அவர் ஆமாம் என்று ஆமோதித்தது தான் தாமதம் அந்த பெண் நான் உங்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசிய பெண் என்றார். அதை கேட்ட தீபேந்திரா சிங் அதிர்ச்சியில் உறைந்தார்.
போட்டோவில் உள்ளது யார் என்று கேட்டார். அது நான் தான் என்னுடைய இளம் வயது போட்டோ அது, எனக்கு இப்போது 45 வயதாகிறது என்றார்.
இதை கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தீபேந்திரா சிங் அந்த பெண்ணை அடித்து உதைத்தார். மேலும் அவரிடம் இருந்த செல்போனையும் பறித்து கொண்டு சென்று விட்டார்.
இதுகுறித்து அந்த பெண் அடையாளம் தெரியாத வாலிபர் தன்னை தாக்கி சென்று விட்டதாக போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தீபேந்திரா சிங்கை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கத்தில் நான் ஏமாற்றமடைந்தால் இவ்வாறு நடந்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்தார்.