search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மேகதாது அணை திட்ட பணி தீவிரம்- சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி பெற கர்நாடக அரசு நடவடிக்கை
    X

    மேகதாது அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ள பகுதி

    மேகதாது அணை திட்ட பணி தீவிரம்- சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி பெற கர்நாடக அரசு நடவடிக்கை

    • அணை கட்டும் பட்சத்தில் பாதிக்கப்படும் வனப்பகுதி நிலத்திற்கு மாற்று இடம் வழங்கும் பணியை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது.
    • 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் வனப்பகுதி நிலம் அழிக்கப்படுவதை காரணம் காட்டி சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.

    பெங்களூரு:

    காவிரி நதிநீரை பங்கீட்டு கொள்வது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. அதாவது ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தான் இந்த புதிய அணைகட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்காக ரூ.9 ஆயிரம் கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது.

    மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு மத்திய அரசும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்காமல் இருந்து வந்தாலும், தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி அணைகட்டும் திட்டத்திற்கான முன்னேற்பு பணிகளில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் வனப்பகுதி நிலம் அழிக்கப்படுவதை காரணம் காட்டி சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.

    இதனால் அணை கட்டும் பட்சத்தில் பாதிக்கப்படும் வனப்பகுதி நிலத்திற்கு மாற்று இடம் வழங்கும் பணியை கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது அணைக்காக கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு நிகராக 3 மாவட்டங்களில் மாற்று இடங்களை கர்நாடக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். அதன்படி, சாம்ராஜ்நகர், மண்டியா மற்றும் ராமநகர் மாவட்டத்தில் 7,404.62 ஏக்கர் நிலத்தை கர்நாடக அரசு தேர்வு செய்துள்ளது.

    இதன்மூலம் 5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்பட்டாலும், அதற்கு மேலாக 7,404 ஏக்கர் நிலம் வனப்பகுதியாக மாற்றப்படும் என்றும், அதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்பதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தெரிவிக்கவும், மேகதாதுவில் அணைகட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கும் கர்நாடக அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

    இதுபற்றி கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத பட்சத்திலும், மாற்று நிலத்தை வழங்க சத்தமில்லாமல் மேகதாது அணை திட்ட முன்னேற்பாட்டு பணிகளை மும்முரமாக்கி உள்ளது தெரியவந்துள்ளது. இது மேகதாது அண திட்டத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×