என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரிவினைவாத அரசியலை பரப்ப முயற்சி:தி கேரள ஸ்டோரி படத்துக்கு பினராயி விஜயன் எதிர்ப்பு
    X

    பிரிவினைவாத அரசியலை பரப்ப முயற்சி:'தி கேரள ஸ்டோரி' படத்துக்கு பினராயி விஜயன் எதிர்ப்பு

    • டிரெய்லரில் நாம் பார்த்தது அனைத்துமே போலி கதையம்சமாகும்.
    • இது சங்க்பரிவார்களின் பொய்களை பரப்பும் தொழிற்சாலையின் தயாரிப்பாகும்.

    திருவனந்தபுரம் :

    கேரளாவில் 'தி கேரள ஸ்டோரி' என்ற திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தி கேரள ஸ்டோரி படத்தின் டிரெய்லர் என்பது மதசார்பின்மையை அடிப்படையாக கொண்ட கேரளாவை மத பயங்கரவாதத்தின் மையமாக நிலை நிறுத்தி கொள்ளும் வகையில் சங்க்பரிவார் பிரசாரமாக உள்ளது. போலியான கதைகள், திரைப்படங்கள் மூலம் பிரிவினைவாத அரசியலை அவர்கள் பரப்ப முயற்சிக்கிறார்கள். எந்தவித உண்மையும், ஆதாரமும் இன்றி இதுபோன்ற கட்டுக்கதைகளை பரப்புகிறார்கள். படத்தின் டிரெய்லரில் நாம் பார்த்தது அனைத்துமே போலி கதையம்சமாகும். இது சங்க்பரிவார்களின் பொய்களை பரப்பும் தொழிற்சாலையின் தயாரிப்பாகும்.

    கேரளாவில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய சங்க்பரிவார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உலகத்தின் முன், இது போன்ற பிரசார படங்களும், அதில் சித்தரிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மதத்தினரை அந்நியப்படுத்துவதும், கேரளாவில் அரசியல் ஆதாயம் தேடும் சங்க்பரிவார் முயற்சிகளின் பின்னணியாக உள்ளது. விஷ விதைகளை விதைத்து மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×