என் மலர்
இந்தியா
மந்திரி பதவி ராஜினாமா: பாஜக தோற்றதால் வாக்குறுதியை நிறைவேற்றிய தலைவர்
- கிழக்கு ராஜஸ்தானில் ஏழு தொகுதிகளிலும் வெற்றி பெற வைப்பது தனது பொறுப்பு என தெரிவித்திருந்தார்.
- ஆனால் நான்கு தொகுதிகளில் பாஜக தோல்வியை சந்தித்ததால் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கிரோடி லால் மீனா. 72 வயதான இவர் ஐந்து முறை ராஜஸ்தான் மாநில எம்.எல்.ஏ. ஆவார். இரண்டு முறை எம்.பி.யாக இருந்துள்ளார். விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட துறைகளை கையில் வைத்திருந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி உள்ளன. கடந்த முறை பாஜக 24 இடங்களை பிடித்தது. இந்த முறை 25 தொகுதிகளை பாஜக பிடிக்கும். கிழக்கு ராஜஸ்தானில் உள்ள ஏழு இடங்களிலும் பாஜக வெற்றி பெறும். இல்லையெனில் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கிரோடி லால் மீனா கூறுகைியல் "பிரதமர் மோடி தன்னிடம் ஏழு தொகுதிகளை கொடுத்துள்ளதாக தெரிவித்தார். நான் கடுமையாக பணியாற்றியுள்ளேன். கட்சி ஏழு தொகுதிகளில் ஒரு தொகுதியில் தோல்வியடைந்தாலும் கூட மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 25 தொகுதியில் பாஜக 14 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களில் வெற்றி பெற்றது.
கிரோடி மீனாவுக்கு ஒதுக்கப்பட்ட பராத்பூர், கராயுலி-தோல்பூர், டோங்-சவாய் மதோபூர், தவுசா ஆகிய தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது.
இந்த நிலையில் தனது மந்திரி பதவியை கிரோடி லால் மீனா ராஜினாமா செய்துள்ளார். மந்திரி பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் "நான் ராஜினாமா செய்துவிட்டேன். சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு நான் செல்லவில்லை. தார்மீக ரீதியாக என்னால் செல்ல முடியவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன் லால் சர்மா, மூத்த பழங்குடியின அரசியல் தலைவரான கிரோடி லால் மீனாவை சமரசம் செய்ய முயன்றார். இதனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"நான் முதல்வரை சந்தித்தேன். அவர் ராஜினாமாவை ஏற்கமாட்டேன் எனத் தெரிவித்தார்" என்றும் கிரோடி லால் மீனா தெரிவித்துள்ளார்.
2019-ல் கூட்டணியுடன் சேர்ந்து 25 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை 14 இடங்களில்தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனால் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பாஜக தலைமையிலான கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது.