என் மலர்
இந்தியா

தமிழ்நாட்டிற்கு வாருங்கள்.. சிவசேனா ஆதரவாளரிடம் குணால் கம்ரா பேசிய ஆடியோ இணையத்தில் வைரல்
- மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குணால் கம்ரா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. .
- குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தனர்
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் அவதூறாக பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மறுத்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
முன்னதாக குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், சிவசேனா கட்சியினர் குணால் கம்ரா சர்ச்சை கருத்து கூறிய ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். மேலும், குணால் கம்ரா தான் பேசியதற்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தனர்.
பிறகு, அந்த ஸ்டூடியோ விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர். சிவசேனா கட்சியினர் கொதிப்படைந்துள்ள நிலையில், குணால் கம்ரா தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் தொடங்கி மாநில அமைச்சர்கள் வரை குணால் கம்ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிவசேனா சிவசேனா ஆதரவாளர் ஒருவர் குணால் கம்ராவிடம் செல்போனில் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் பேசப்பட்டவை:
குணால் கம்ரா: வணக்கம்
சிவசேனா சிவசேனா: குணால் கம்ராவா?
குணால் கம்ரா: ஆமா, சொல்லுங்க.
சிவசேனா சிவசேனா: ஜெகதீஷ் சர்மா பேசுகிறேன். உங்கள் வீடியோவில் சாஹேப் பற்றி என்ன சொன்னீர்கள்?
குணால் கம்ரா: எந்த சாஹிப்?
சிவசேனா சிவசேனா: ஷிண்டே சாஹேப், எங்கள் (துணை) முதல்வர். உங்கள் வீடியோவில் அவரைப் பற்றி என்ன பேசினீர்கள்?
குணால் கம்ரா: அவர் இப்போது எங்கே முதலமைச்சராக இருக்கிறார்? அவர் துணை முதலமைச்சராக இருக்கிறார்.
சிவசேனா சிவசேனா: அவர் துணை முதல்வர். அவரைப் பற்றி என்ன வீடியோவை வெளியிட்டிருக்கிறீர்கள்?
குணால் கம்ரா: நீங்க வீடியோவை பார்த்தீர்களா?
சிவசேனா சிவசேனா: பார்த்தேன். நீங்கள் நிகழ்ச்சி நடத்திய ஓட்டலை நாங்கள் என்ன செய்தோம் என்று பாருங்கள். நாங்கள் உங்களை எங்கு கண்டாலும் இதே நிலைதான். புரிகிறதா?
குணால் கம்ரா: தமிழ்நாட்டுக்கு வந்தால் என்னை பார்க்கலாம்.
சிவசேனா சிவசேனா: நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?
குணால் கம்ரா - தமிழ்நாட்டில் தான்.
சிவசேனா சிவசேனா: தமிழ்நாட்டிற்கு வந்து உங்களை அடிப்பேன்.
குணால் கம்ரா: வாருங்கள், தமிழ்நாட்டிற்கு வாருங்கள்.
சிவசேனா சிவசேனா: இப்போ தமிழ்நாட்டுக்கு எப்படிப் போறது? தமிழ்நாட்டுக்கு எப்படிப் போறது? நம்ம ஐயாகிட்ட ஒரு நிமிஷம் பேசுங்க.
காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் இந்த ஆடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இதனை நகைசுவை என்று குறிப்பிட்டார்.