என் மலர்
இந்தியா
போராட்டம் நடத்திய பெண்கள் மீது மண்ணைக் கொட்டி உயிரோடு புதைக்க முயற்சி- ஆந்திராவில் பரபரப்பு
- உள்ளூர் மக்கள் சிலர் அங்கு சென்று, பெண்கள் மீது கொட்டப்பட்ட மண்ணை அகற்றி, இருவரையும் மீட்டனர்.
- குடும்பச் சொத்தில் உரிய பங்கை கேட்டதால கொல்ல முயன்றதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்
ஆந்திராவில் சொத்து பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடத்திய பெண்களை உயிரோடு புதைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஹரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தாளம்மா மற்றும் அவரது மகள் சாவித்ரி ஆகியோருக்கும், அவர்களின் உறவினர்களான ஆனந்தராவ், பிரகாஷ் ராவ், ராமராவ் ஆகிருக்குமிடையே பூர்வீக நிலத்தின் உரிமை தொடர்பாக தகராறு உள்ளது. குடும்ப சொத்தில் தங்களுக்கு உரிய பங்கை தரக்கோரி இரண்டு பெண்களும் 2019ம் ஆண்டு முதல் போராடிவந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரண்டு பெண்களும் போராட்டம் நடத்தும்போது, டிராக்டரில் வந்த ராமராவ் மண்ணைக் கொட்டி உயிருடன் புதைத்து கொலை செய்ய முயன்றுள்ளனர். இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் சிலர் அங்கு சென்று, பெண்கள் மீது கொட்டப்பட்ட மண்ணை அகற்றி, இருவரையும் மீட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குடும்பச் சொத்தில் தங்களுக்கு உரிய பங்கைக் கேட்டபோது தங்கள் மீது மண்ணைக் கொட்டி கொல்ல முயன்றதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
பிரச்சனைக்குரிய நிலத்தில் ராமராவ், கட்டிடம் கட்டுவதற்காக மண் மற்றும் கிராவலை கொட்டி உள்ளார். இதைப் பார்த்த தாளம்மா மற்றும் அவரது மகள் சாவித்ரி இருவரும் அங்கு சென்று அந்த இடத்தில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி, மண் கொட்டுவதை தடுத்துள்ளனர். எனினும் ராமராவ் மண்ணை கொட்டியுள்ளார். அப்போது பெண்கள் இருவரும் அங்கு அமர்ந்து தர்ணா செய்துள்ளனர். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத ராமராவ், அவர்கள் மீது மண்ணை கொட்டி உள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.