என் மலர்
இந்தியா

நாக்பூரில் ஊரடங்கு நீடிக்கிறது- கல்லறை பகுதியில் டிரோன்கள் பறக்கவிட தடை
- நாக்பூரில் தற்போது சட்டம்- ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பல்வேறு சமூக ஊடக தளங்களில் இருந்து இதுவரை 506 பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன.
நாக்பூர்:
மராட்டியத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் முகலாய மன்னர் ஔரங்கசீப் கல்லறை உள்ளது. இந்த கல்லறையை அகற்றக்கோரி கடந்த திங்கட்கிழமை இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதில் நாக்பூரில் நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அன்று இரவு நாக்பூரில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக மகால், ஹன்சாபுரி பகுதிகளில் போராட்டக்காரர்கள் பல வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதில், 42 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 போலீசார் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 54 பேரை கைது செய்துள்ளனர். கலவரத்துக்கு காரணமான முக்கிய குற்றவாளியை தேடி வருவதாக மாநில உள்துறை இணை மந்திரி யோகேஷ் கதம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சம்பவம் நடைபெற்று 3 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் நாக்பூரில் பதற்றம் தணியவில்லை. இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கோட்வாலி, கணேஷ்பேத், தேசில், லகட்கஞ்ச், பச்பாவோலி, சாந்த் நகர், சக்கர்தாரா, நந்தன்வன், இமாம்பாடா, யசோதரா நகர் மற்றும் கபில் நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. மேலும் பதற்றமான பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல அதிவிரைவு படை, கலவர கட்டுப்பாட்டு பிரிவு படையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் நாக்பூரில் தற்போது சட்டம்- ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து ஔரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ள சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் பலப்படுத்தி உள்ளனர். இந்த பகுதியை டிரோன்கள் பறக்கவிட தடை செய்யப்பட்ட மண்டலமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இங்கு டிரோன்களை பறக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வன்முறையை தூண்டும் வகையில் வெளியிடப்படும் பதிவுகளை அகற்றுவதற்காக சத்ரபதி சம்பாஜி நகரில் 24 மணி நேரமும் போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பல்வேறு சமூக ஊடக தளங்களில் இருந்து இதுவரை 506 பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன. மேலும் 80-க்கும் மேற்பட்ட நபர்கள் வலைதளத்தில் மோசமான பதிவுகளை இடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டு உள்ளனர். இனிமேல் ஆட்சேபனைக்குரிய பதிவுகள் இடுபவர்கள் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்வோம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.