என் மலர்
இந்தியா

இது ஒரு குற்றமாயா..? சமையலுக்கு 2 தக்காளி பயன்படுத்தியதால் ஆத்திரம்- வீட்டைவிட்டு வெளியேறிய மனைவி
- மனைவி, மகள் கிடைக்காததால் அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் சஞ்சீவ் புகார் அளித்தார்.
- காணாமல் போன மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து ஒப்படைப்பதாக சஞ்சீவிடம் காவல் துறை உறுதி.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை உச்சத்தை தொட்டுள்ளது. கிலோவுக்கு ரூ.130- ரூ.150 வரை விற்பனையாகிறது. இதனால் சாமானிய மக்கள் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியை வாங்க சிரமப்பட்டு வருகின்றனர். சமையலுக்கு தக்காளி மிக அவசியம் என்பதால், வீட்டில் பெண்கள் சிறிய தொகையிலாவது தக்காளியை வாங்கி பார்த்து பார்த்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தக்காளியால் சண்டை ஏற்பட்டு ஒரு குடும்பமே பிரிந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் ஷாஹ்டால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் புர்மன். சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். அப்போது, சமையலுக்காக சஞ்சீவ் தனது மனைவியை கேட்காமல் இரண்டு தக்காளியை பயன்படுத்தியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி தக்காளி விற்கும் விலைவாசிக்கு என்னிடம் கேட்காமல் எப்படி இரண்டு தக்காளியை சமையலுக்கு பயன்படுத்துவீர்கள் என்று கோபமடைந்துள்ளார். இது இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பெரிய பிரச்சினையாகி உள்ளது. இதனால் கோபமடைந்த சஞ்சீவின் மனைவி தனது மகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
போனவள் திரும்பி வந்துவிடுவாள் என்று இருந்த சஞ்சீவ் வெகுநேரமாகியும் வராததால் பதற்றமடைந்தார். பின்னர் எங்கு தேடியும் மனைவி, மகள் கிடைக்காததால் அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் சஞ்சீவ் புகார் அளித்தார்.
இந்நிலையில், காணாமல் போன மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து ஒப்படைப்பதாக சஞ்சீவிடம் காவல் துறை உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.