search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகா கும்பமேளா நாளை மறுநாள் தொடங்குகிறது- பாதுகாப்பு பணியில் செயற்கை தொழில்நுட்பம்
    X

    மகா கும்பமேளா நாளை மறுநாள் தொடங்குகிறது- பாதுகாப்பு பணியில் செயற்கை தொழில்நுட்பம்

    • 3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள்.
    • கும்பமேளா நடைபெறும் பகுதியில் செயற்கை தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் 2,700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    பிரயாக்ராஜ்:

    இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா கொண்டாடப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் அரித்வார், மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ஆகிய 4 ஊர்களில் உள்ள ஆற்றங்கரையில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது. அதில் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவே மிகவும் புகழ்பெற்றது. அங்கு கங்கை, யமுனை மற்றும் கண்களுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதுகிறார்கள்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா கும்பமேளா நிகழ்ச்சிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விழாவான இந்த மகா கும்பமேளாவில் சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக பல்வேறு அடிப்படை வசதிகளை உத்தரபிரதேச மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது. விழாவில் கலந்துகொள்ள வருபவர்களுக்காக தற்காலிக குடில்களை அந்த மாநில அரசு அமைத்துள்ளது. மேலும் சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

    ஏராளமானோர் கூடும் நிகழ்ச்சி என்பதால் உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பன்னடுக்கு பாதுப்பு செய்யப்பட்டுள்ளது. அதிலும் திரிவேணி சங்கமம் பகுதி மற்றும் கும்பமேளா கண்காட்சி நடைபெறும் பகுதிகளில் 123 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் 37 ஆயிரம் போலீசாரும், 14 ஆயிரம் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுதவிர தேசிய பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் எதிர்ப்பு படையினர், சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆகியோரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கும்பமேளா நடைபெறும் பகுதியில் செயற்கை தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் 2,700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏராளமான டிரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன. சதித்திட்டங்களை முறியடிக்கும் வகையில் ஒவ்வொரு நிகழ்வும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கூடத்தில் காணாமல் போகும் நபர்களை கண்டுபிடித்து கொடுக்க 10 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில மருத்துவ உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி சிற்றுண்டி பகுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×