என் மலர்
இந்தியா
ஷாருக்கானுக்கு ரூ.9 கோடியை திருப்பி கொடுக்கும் மகாராஷ்டிர அரசு
- நிலத்தை மாற்றிய பிறகு, அதிகாரிகள் நிலத்தை மதிப்பீடு செய்ததில் தவறு நடந்திருப்பது தெரியவந்தது.
- மனுவை கலெக்டர் மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார்.
மும்பை:
நடிகர் ஷாருக்கானுக்கு மும்பை பாந்த்ரா கடற்கரை அருகில் மன்னத் என்ற பெயரில் பங்களா உள்ளது. ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரிகான் பெயரில் உள்ள இந்த பங்களா இருக்கும் நிலம் மாநில அரசுக்கு சொந்தமானது. அந்த நிலத்தை இதற்கு முன்பு அந்த பங்களாவை வைத்திருந்தவருக்கு மாநில அரசு குத்தகைக்குவிட்டிருந்தது. அதனை வாங்கியவர் ஷாருக்கானுக்கு விற்பனை செய்தார். 2,446 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த வீட்டுடன் கூடிய நிலத்தை ஷாருக்கான் வாங்கிய பிறகு மாநில அரசு புதிய கொள்கை ஒன்றை அறிவித்தது. அதன்படி மாநில அரசிடம் நிலத்தை குத்தகைக்கு வாங்கியவர்கள் குறிப்பிட்ட பணம் செலுத்தி அதனை சொந்தமாக்கி கொள்ள முடியும்.
இந்த கொள்கையை பயன்படுத்தி ஷாருக்கான் தனது வீடு இருந்த நிலத்திற்கு பணம் செலுத்தி குத்தகையில் இருந்த நிலத்தை சொந்தமாக்கி கொள்ள அரசிடம் விண்ணப்பித்தார். அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து அதன் மதிப்பில் 25 சதவீதத்தை செலுத்தும்படி ஷாருக்கானிடம் கூறினர்.
இதையடுத்து ஷாருக்கான் ரூ.27.50 கோடி செலுத்தி நிலத்தை தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயருக்கு மாற்றினார். நிலத்தை மாற்றிய பிறகு, அதிகாரிகள் நிலத்தை மதிப்பீடு செய்ததில் தவறு நடந்திருப்பது தெரியவந்தது.
இதனை 2022-ம் ஆண்டு ஷாருக்கான் கண்டுபிடித்ததோடு, தான் கூடுதலாக செலுத்திய ரூ.9 கோடியை திருப்பி கொடுக்கும்படி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தார். அந்த மனுவை கலெக்டர் மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார். அதை ஏற்று மாநில அரசு ஒப்புதல் கொடுத்த பிறகு ஷாருக்கானுக்கு ரூ.9 கோடி திருப்பி கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.