என் மலர்
இந்தியா

சிவசேனாவின் உண்மை முகம் வெளிப்படும்.. குணால் கம்ராவுக்கு மகாராஷ்டிரா அமைச்சர் எச்சரிக்கை..!
- ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
- சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தினர்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் அவதூறாக பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மறுத்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. முன்னதாக குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், சிவசேனா கட்சியினர் குணால் கம்ரா சர்ச்சை கருத்து கூறிய ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். மேலும், குணால் கம்ரா தான் பேசியதற்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தினர்.
பிறகு, அந்த ஸ்டூடியோ விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர். சிவசேனா கட்சியினர் கொதிப்படைந்துள்ள நிலையில், குணால் கம்ரா தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் தொடங்கி மாநில அமைச்சர்கள் வரை குணால் கம்ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அம்மாநில உள்துறை அமைச்சர் யோகேஷ் ராம்தாஸ் கதம் இது குறித்து கூறும் போது, "உச்சநீதிமன்றம், இந்திய பிரதமர், இந்து கடவுள்களை அவமதிப்பாய் எனில், நீ தண்டனை அனுபவிக்க வேண்டும். நீ செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மகாராஷ்டிரா அல்லது இந்தியாவில் இதுபோல் நடந்து கொள்ள முடியாது. நாங்கள் நகைச்சுவையை ஏற்றுக் கொள்வோம், ஆனால் இத்தகைய நகைச்சுவை மகாராஷ்டிராவில் ஏற்றுக் கொள்ளப்படாது," என தெரிவித்தார்.
இதேபோல் அமைச்சர் குலாப் ரகுநாத் பாட்டீல் இதுகுறித்து கூறும்போது, "அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், நாங்கள் அவரிடம் எங்கள் மொழியில் பேசுவோம். சிவசேனா அவரை விட்டுவிடாது.. இந்த அவமானத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம், மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் வெளியில் வந்து எங்கு மறைந்து கொள்ள முடியும்? சிவசேனா அதன் உண்மை முகத்தை காண்பிக்கும்," என்று எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தின் கார் காவல் துறை சார்பில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா விசாரணை அதிகாரியிடம் இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக குணால் கம்ரா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.