என் மலர்
இந்தியா
பெண் டாக்டர் கொலை வழக்கு: "தடயங்களை அழிக்கும் மம்தா பானர்ஜி" பாஜக குற்றச்சாட்டு
- பெண் டாக்டர் கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பெண் டாக்டர் கொலை சம்பவத்தை சிபிஐ விசாரிக்க இருக்கிறது.
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், இவர் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட பிறகு அவருடன் சஞ்சய்ராய் உல்லாசமாக இருந்துள்ளான். வாக்குமூலத்திலும் இதை அவன் தெரிவித்துள்ளான்.
உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கெடு விதித்துள்ளார்.
இந்நிலையில், பெண் டாக்டர் கொலை சம்பவம் அரங்கேறிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குறிப்பிட்ட அறைகளை இடித்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திடீரென மருத்துவக் கல்லூரி வளாகத்தில், அதுவும் குற்றச் சம்பவம் அரங்கேறிய இடத்தில் இத்தகைய பணி மேற்கொள்ளப்படுவது, தடயங்களை அழிப்பதற்கான முயற்சி என பாஜக குற்றம்சாட்டி உள்ளது.
இது குறித்து பாஜக ஐடி செல் பிரிவு தலைவர் அமித் மால்வியா, "மம்தா பானர்ஜியின் அக்கறையின்மை, கொல்கத்தா காவல்துறையின் மூடிமறைக்கும் முயற்சியால் மேற்கு வங்காளம் கோபத்தால் கொந்தளிக்கிறது."
"இந்த வேளையில், ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் மார்பு மருத்துவப் பிரிவில் உள்ள அறைச் சுவர்களை உடைத்துள்ளனர். அங்கு தான் பணியில் இருந்த ஜூனியர் மருத்துவர் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் மூலம் சிபிஐ விசாரணைக் குழுவை கொலையாளிகளிடம் கொண்டு செல்லக்கூடிய முக்கியமான ஆதாரங்கள் அழிக்கப்பட்டது."
"ரெசிடென்ட் டாக்டர் ஏரியா எனக் குறிக்கப்பட்ட பகுதி மற்றும் மார்பு மருத்துவத் துறையின் உள்ளே கழிப்பறை (பெண்) ஆகியவையும் சீரமைப்பு என்ற பெயரில் உடைக்கப்படுகின்றன. இது, மம்தா பானர்ஜி எல்லாவற்றிலும் ஆதாரங்களை அழித்து, கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் குற்றச் சுவடுகளை மறைப்பதில் ஈடுபட்டார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை," என்று எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.