என் மலர்
இந்தியா
டாக்டர்கள் பாதுகாப்புக்கு சிறப்பு சட்டம்- பினராயி விஜயன் அறிவிப்பை தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் போராட்டம் வாபஸ்
- டாக்டர்களின் அனைத்து கோரிக்கைகள் குறித்தும் அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதி அளித்தார்.
- கலெக்டர் மேற்பார்வையில் 6 மாதத்திற்கு ஒரு முறை பாதுகாப்பு ஏற்பாடுகள் தணிக்கை செய்யப்படும் எனவும் பேச்சுவார்த்தையின் போது உறுதி அளிக்கப்ப ட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொட்டா ரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பெண் டாக்டர் வந்தனாவை, சிகிச்சைக்கு சென்ற போதை நபர் குத்தி கொன்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து கேரளா முழுவதும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளின் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடு செய்யும் வரை போராட்டத்தை வாபஸ் பெறமாட்டோம் எனவும் அவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து நேற்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் போராட்டக்குழுவினருடன் பேச்சு நடத்தினார். அப்போது டாக்டர்களின் அனைத்து கோரிக்கைகள் குறித்தும் அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதி அளித்தார்.
டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அரசு ஆஸ்பத்திரிகளில் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும், மேலும் இது தொடர்பான அவசர சட்டம் பிறப்பிக்க மந்திரி சபை கூட்டத்தை கூட்டி முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் சுகாதார துறையினர் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தில் கூடுதல் திருத்தங்கள் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் மேற்பார்வையில் 6 மாதத்திற்கு ஒரு முறை பாதுகாப்பு ஏற்பாடுகள் தணிக்கை செய்யப்படும் எனவும் பேச்சுவார்த்தையின் போது உறுதி அளிக்கப்ப ட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட டாக்டர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.