என் மலர்
இந்தியா
முடா முறைகேடு வழக்கில் ரூ. 300 கோடி சொத்துகள் முடக்கம்.. சித்தராமையா பதவி விலக பாஜக வற்புறுத்தல்
- 14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
- சொத்துக்கள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்டுகள் உள்ளிட்ட பலரது பெயர்களில் உள்ளன
கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ), 2002ன் விதிகளின் கீழ், 300 கோடி ரூபாய் மதிப்பிலான 140 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று [வெள்ளிக்கிழமை] முடக்கியுள்ளது.
முடக்கப்பட்ட சொத்துக்கள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்டுகள் உள்ளிட்ட பலரது பெயர்களில் உள்ளன என அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்கள் முடக்கப்பட்டதைக் காரணம் காட்டி சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று பாஜக வற்புறுத்தத் தொடங்கியுள்ளது.
"சித்தராமையா தனது முதலவர் பதவியின் மாண்புக்கு மதிப்பளித்தால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை தொடர அனுமதிக்க வேண்டும். கர்நாடக மக்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் நீதியை எதிர்பார்க்கிறார்கள்" என்று பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.