என் மலர்
இந்தியா

வக்புதிருத்த மசோதாவை எதிர்த்து முஸ்லிம் சட்டவாரியம் போராட்டம்: ஓவைசி பங்கேற்பு

- எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் நிராகரிப்பட்டன.
- வக்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று கோஷம்.
புதுடெல்லி:
வக்பு வாரிய சொத்துக்களை முறைப்படுத்தும் வகையில் பல்வேறு திருத்தங்களுடன் வக்பு திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் பாராளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி.) அமைக்கப்பட்டது. இதில் எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் நிராகரிப்பட்டன. ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே வக்பு திருத்த மசோதாவின் ஜே.பி.சி. அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மந்திரி சபை கூட்டத்திலும் கூட்டுக்குழு வின் 14 திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் வக்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த போராட்டம் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தலைவரும், எம்.பி.யுமான ஓவைசி பங்கேற்றார்.
வக்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.