search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாஜக இன்னும் ஆட்சியில் இருந்தால்,  இளைஞர்களுக்கு திருமணம் கூட நடக்காது -  அகிலேஷ்
    X

    பாஜக இன்னும் ஆட்சியில் இருந்தால், இளைஞர்களுக்கு திருமணம் கூட நடக்காது - அகிலேஷ்

    • ஹோலி பல வண்ணங்களால் ஆன பண்டிகை. ஆனால் நம் நாட்டில் சிலருக்கு சில நிறங்கள் பிடிக்கவில்லை
    • உத்தரபிரதேசத்தில் வினாத்தாள் கசிய விடாமல் அரசு தேர்வு நடப்பது இல்லை

    பாஜக இன்னும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால், இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் அவர்களுக்கு திருமணம் கூட நடக்காது" என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று தனது சொந்த கிராமமான சைஃபாயில் தனது கட்சியினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

    அப்போது பேசிய அவர், "ஹோலி பண்டிகை ஒருவரையொருவர் கொண்டாடுவதற்கும் அரவணைப்பதற்கும் வாய்ப்பளிக்கிறது. அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்று நீங்களும் நானும் இந்த சமயத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

    ஹோலி பல வண்ணங்களால் ஆன பண்டிகை. ஆனால் நம் நாட்டில் சிலருக்கு சில நிறங்கள் பிடிக்கவில்லை, அவர்களுக்கு ஒரே ஒரு நிறம் மட்டும் தான் பிடிக்கும். ஆனால், இந்தியா பலதரப்பட்ட மக்களின் பல்வேறு சித்தாந்தங்களையும், மாறுபட்ட சிந்தனைகளையும் கொண்டிருக்கும் ஒரு ஜனநாயக நாடு என்பதே உண்மை.

    உத்தரபிரதேசத்தில் வினாத்தாள் கசிய விடாமல் அரசு தேர்வு நடப்பது இல்லை. வேலை கொடுக்க வேண்டும் என்றால், இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். ஆனால் உயர்சாதியினருக்கு மட்டுமே அரசு வேலை கொடுக்க விரும்பும் பாஜக அரசு, வேண்டுமென்றே வினாத்தாள்களை கசியவிடுகிறது.

    கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இதுவரை ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாடு எப்படி வளர்ந்த நாடாக மாற முடியும்?

    தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த கட்சிக்கு அதிக பணம் சென்றது என்பது அனைவருக்கும் தெரியும். நன்கொடைகள் என்பது தானாக முன்வந்து அல்லது மக்களுக்கு உதவுவதற்காக வழங்கப்படுகின்றன. ஆனால் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்றவற்றின் மூலம் அழுத்தம் கொடுத்து பணத்தை பெறுவது என்பது வழிப்பறியாகவே கருதப்படும். தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக செய்தது வழிப்பறி தான்.

    பாஜகவுக்கு யாராவது பணம் கொடுத்தால் அது நன்கொடை, வேறு யாருக்காவது கொடுத்தால் அது கருப்பு பணம் என்று மோடி, அமித் ஷா நினைக்கின்றனர். வரும் தேர்தலில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும்" என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×