search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய கொள்கை: சுங்கக்கட்டணத்தில் சலுகை - நிதின் கட்காரி அறிவிப்பு
    X

    புதிய கொள்கை: சுங்கக்கட்டணத்தில் சலுகை - நிதின் கட்காரி அறிவிப்பு

    • நாடு முழுவதும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்து இருக்கிறது.
    • பிரம்மபுத்ரா நதியில் ஏராளமான பாலங்களை அமைத்து உள்ளோம்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம் தொடர்பாக நேற்று உறுப்பினர்கள் பல்வேறு கேள்வி எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி பதிலளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்து இருக்கிறது. கடந்த 2023-24-ம் ஆண்டில் ரூ.64,809.86 கோடி வசூலாகி இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 35 சதவீதம் அதிகம். அதேநேரம் 2019-20-ல் இது ரூ.27,503 கோடியாக இருந்தது.

    சாலை உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு அதிகம் செலவிடுகிறது. எனவே சுங்கக்கட்டணம் அவசியமானது. சிறந்த சாலையை நீங்கள் விரும்பினால், அதற்காக நீங்கள் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்பதே கொள்கை ஆகும்.

    நாங்கள் ஏராளமான பெரிய சாலைகள், 4 வழிச்சாலைகள், 6 வழிச்சாலைகளை அமைத்து வருகிறோம். பிரம்மபுத்ரா நதியில் ஏராளமான பாலங்களை அமைத்து உள்ளோம்.

    இதற்காக வெளிச்சந்தையில் இருந்து நிதி பெற்று வருகிறோம். எனவே சுங்கக்கட்டணம் இல்லாமல் இவற்றை செய்ய முடியாது.

    ஆனாலும் நாங்கள் மிகவும் நியாயமான முறையிலேயே இருக்கிறோம். 4 வழிச்சாலைகளில் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கிறோம். இருவழிச்சாலைகளில் வசூலிக்கவில்லை.

    தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து கட்டண சுங்கச்சாவடிகளும் தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகள்-2008 மற்றும் தொடர்புடைய சலுகை ஒப்பந்தத்தின் விதிகளின்படி நிறுவப்பட்டுள்ளன.

    இந்த சட்டப்படி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே பிரிவு மற்றும் ஒரே திசையில் 60 கி.மீ.க்குள் கட்டணம் வசூலிக்கக்கூடாது. எனவே உண்மையில் சில விதிவிலக்குகள் உள்ளன.

    இந்த பாராளுமன்ற அமர்வுக்குப்பிறகு சுங்கக்கட்டணம் தொடர்பாக நாங்கள் ஒரு புதிய கொள்கையை அறிவிக்க உள்ளோம். அதன்மூலம் இந்த பிரச்சனை தீர்க்கப்படும்.

    ஏனெனில் அதில் நாங்கள் நுகர்வோருக்கு நியாயமான சலுகைகளை வழங்குவோம். அதன்பிறகு சுங்கக்கட்டணம் தொடர்பாக எந்த விவாதமும் இருக்காது.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

    Next Story
    ×