search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும்: பிரதமர் மோடி முன்னிலையில் அசோக் கெலாட்  பேச்சு
    X

    ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும்: பிரதமர் மோடி முன்னிலையில் அசோக் கெலாட் பேச்சு

    • ஜனநாயகத்தில் பகைமைக்கு இடம் இல்லை.
    • எல்லோருக்கும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது.

    ஜெய்ப்பூர் :

    ராஜஸ்தானில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வளர்ச்சித்திட்டங்களைத் தொடங்கி வைத்துப்பேசிய விழாவில், அந்த மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி அசோக் கெலாட்டும் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப்பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் பகைமைக்கு இடம் இல்லை. சித்தாந்த சண்டைகளுக்குத்தான் இடம் உண்டு. எல்லோருக்கும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. நாட்டில் எல்லா மதத்தினர், சாதியினர் இடையேயும் அன்பும், சகோதரத்துவமும் இருக்க வேண்டும்.

    எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும். இந்த திசையில் நீங்களும் (பிரதமர் மோடி) செல்வீர்கள் என்று நான் கருதுகிறேன். இது மட்டும் நடந்து விட்டால், ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து நாட்டுக்கு இன்னும் அதிக வீரியத்துடன் பணியாற்ற முடியும்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்பதற்காக தனது இன்னுயிரை நீத்தார். அவர் பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் உருவாவதை அனுமதிக்கவில்லை.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் படுகொலை செய்யப்பட்டார்.

    நாம் அனைவரும் ஒற்றுமையாய் நடைபோட்டால், நாடு ஒன்றாக இருக்கும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

    பதற்றமும், வன்முறையும் வளர்ச்சியைத் தடுத்துவிடும். நீங்கள் (பிரதமர் மோடி) விடுக்கும் செய்தி, நாட்டை ஒன்றுபட்டிருக்கச்செய்யும் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி முன்னிலையில் அசோக் கெலாட் பேசிய இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விழாவில் அசோக் கெலாட் பேச எழுந்தபோது, கூட்டத்தினர் எழுந்து "மோடி மோடி" என கோஷமிட்டனர். அப்போது பிரதமர் மோடி கூட்டத்தினரைப் பார்த்து " நீங்கள் உட்காருங்கள், அப்போதுதான் அசோக் கெலாட் இடையூறின்றி பேச முடியும்" என குறிப்பால் உணர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×