search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    தனிப்பட்ட மத சட்டங்களால் குழந்தைத் திருமண தடுப்புச்  சட்டத்தை மீற முடியாது - உச்சநீதிமன்றம்
    X

    தனிப்பட்ட மத சட்டங்களால் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை மீற முடியாது - உச்சநீதிமன்றம்

    • 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமைக்கு ஈடாகும்.
    • கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன

    குழந்தை திருமணம் தடைச்சட்டத்தை எந்த ஒரு தனி நபர் சட்டங்களாலும் கட்டுப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் ஆண்களின் திருமண வயது 21 என்றும் பெண்களின் திருமண வயது 18 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமைக்கு ஈடாகும்.

    குழந்தை திருமண தடுப்புச் சட்டம், 2006 (பிசிஎம்ஏ) காரணமாகக் குழந்தைத் திருமணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன என தரவுகள் தெரிவிக்கின்றன.

    எனவே குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நேற்று [வெள்ளிக்கிழமை] விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், எந்தவொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாது; குழந்தை திருமணங்கள் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கும் தனிநபா் உரிமையைப் பறிக்கும் செயலாகும் என்று கூறினர்.

    மேலும் குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்கென காவல் துறையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அளவில் குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகளை நியமிப்பது உள்பட வழிகாட்டுதல்களை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

    Next Story
    ×