என் மலர்
இந்தியா
பெட்ரோல், டீசல் விலை குறித்து மறுஆய்வு: ராஜஸ்தானில் முழங்கிய பிரதமர் மோடி
- காங்கிரஸ் மீதான நம்பிக்கை முடியும் இடத்தில் இருந்து, அங்கே மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது.
- மோசமான காங்கிரஸ் அரசை மாற்றும் வாய்ப்பை ஜனநாயகம் உங்களுக்கு வழங்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நாளையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய இருக்கும், பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று துங்கர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சியமைத்ததும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து மறுஆய்வு செய்யப்பட்டு, மக்கள் நலனுக்கான முடிவு எடுக்கப்படும். ராஜஸ்தானில் காங்கிரஸ், அரசு ஊழியர்களை மோசடி செய்துள்ளது. பல மாதங்களாக அரசு அதிகாரிகளின் பணங்கள் தேங்கி கிடக்கிறது. அதற்கான விசாரணை ஏதும் இல்லை.
மோசமான காங்கிரஸ் அரசை மாற்றும் வாய்ப்பை ஜனநாயகம் உங்களுக்கு வழங்கியுள்ளது. சிலநேரங்களில் சிறிய தவறு கூட, ஐந்து ஆண்டுகளுக்கு உங்களை பாதிக்க வைக்கச் செய்யும். ராஜஸ்தானில் மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற, காங்கிரசை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவது முக்கியமானது.
காங்கிரஸ் மீதான நம்பிக்கை முடியும் இடத்தில் இருந்து, அங்கே மோடியின் உத்தரவாதம் தொடங்குகிறது. நம் நாட்டின் கோடிக்கணக்கான பழங்குடியின மக்களுக்கு (Adivasis) காங்கிரஸ் ஒருபோதும் உதவி செய்தது இல்லை. பா.ஜனதா அவர்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அவர்கள் நலத்திற்கான பட்ஜெட்டை உயர்த்தி உள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் குறைந்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மே மாத்தில் இருந்து விலை ஏற்றம், இறக்கம் இல்லாமல் அப்படியே நீடிக்கிறது. மாதத்தின் முதல்நாள், எண்ணெய் நிறுவனங்கள் அதன் விலையை நிர்ணயிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு சமீபத்தில் சமையல் சிலிண்டர் விலையில் 200 ரூபாய் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ஐந்து மாநில தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகியற்றை கருத்தில் கொண்டு விலையை குறைத்தது என எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.