என் மலர்tooltip icon

    இந்தியா

    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி 30-ந்தேதி நாக்பூர் வருகை
    X

    பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி 30-ந்தேதி நாக்பூர் வருகை

    • பிரதமர் மோடி மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையத்தின் விரிவாக்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவார்.
    • பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திர் வளாகத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

    நாக்பூர்:

    ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் மற்றும் மறைந்த ஆா்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ். கோல்வால்கரின் நினைவிடங்கள் நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் பகுதியில் உள்ள டாக்டர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திரில் அமைந்துள்ளன. நாளை மறுதினம்(30-ந்தேதி) நாக்பூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் பிரதமர் நரேந்திர மோடி இந்த நினைவுச்சின்னங்களுக்கு வருகை தருவார் என்று மகாராஷ்டிர பா.ஜ.க. தலைவரும், வருவாய் துறை மந்திரியுமான சந்திரசேகர் பவன்குலே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு நாக்பூர் வருகை தருகிறார். அவா் மாதவ் நேத்ராலயா பிரீமியம் மையத்தின் விரிவாக்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவார். பின்னர் ரெஷிம்பாக்கில் உள்ள ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திருக்கு பிரதமர் வருகை தருகிறார். இதைத்தொடர்ந்து 1956-ம் ஆண்டு அம்பேத்கர் தனது ஆயிரக்கணக்கான சீடர்களுடன் புத்த மதத்தை தழுவிய தீக்ஷா பூமிக்கும் பிரதமர் மோடி செல்வார். பின்னர் அங்குள்ள சூரிய வெடிபொருள் ஆலையையும் அவர் பார்வையிடுவார். நாக்பூர் வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க பா.ஜ.க. பெரிய அளவிலான ஏற்பாடுகளை செய்துள்ளது".

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தும் மாதவ் நேத்ராலயா பிரீமியம் மைய நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து ஆஸ்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர் கூறுகையில், "பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திர் வளாகத்திற்கு வருவது இதுவே முதல் முறையாகும். மறைந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் 2007-ம் ஆண்டு நினைவிடத்திற்கு வருகை தந்தார். ஆனால் அப்போது அவர் பிரதமராக இல்லை. பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக பிரசாரகராக நினைவிடத்திற்கு வருகை தந்தார். ஆனால் பிரதமரான பிறகு முதல் முறையாக அந்த இடத்திற்கு வருகை தருகிறார்" என்றார்.

    Next Story
    ×