என் மலர்
இந்தியா

வாட்ஸ்-அப் மூலம் மனைவிக்கு 'முத்தலாக்' கூறிய வாலிபர்- போலீசார் வழக்குப்பதிவு

- இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர்.
- நுசைபா புகாரின் பேரில் அவரது கணவர் அப்துல் ரசாக் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டம் நெல்லிக் கட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரசாக்(வயது26). இவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கல்லூராவி பகுதியை சேர்ந்த நுசைபா (21) என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு அப்துல் ரசாக் மீண்டும் சவுதி அரேபியாவுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் அவர் தனது மனைவியின் தந்தைக்கு கடந்த மாதம் 'வாட்ஸ்அப்' மூலமாக தகவல் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அதில் அவர் உங்களின் மகளை "முத்தலாக்" செய்வதாக அவர் கூறியிருக்கிறார். அப்துல் ரசாக் மூன்று முறை வாட்ஸ்அப்பில் குரல் பதிவை அனுப்பியிருக்கிறார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நுசைபா, தனது கணவரின் மீது காசர்கோடு ஹோஸ்துர்க் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
முத்தலாக் தடைச்சட்டம் அமலுக்கு வந்தபிறகு ஒருவர் முத்தலாக் செய்ததாக கேரளாவில் வந்த முதல் குற்றச்சாட்டு இதுதான். ஆகவே நுசைபா புகாரின் பேரில் அவரது கணவர் அப்துல் ரசாக் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கில் அப்துல் ரசாக்கின் தாயை இரண்டாவது குற்றவாளியாகவும், சகோதரியை மூன்றாவது குற்றவாளியாகவும் போலீசார் சேர்த்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.