search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் இடைத்தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்: வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம்
    X

    கேரளாவில் இடைத்தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்: வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம்

    • இடைத்தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
    • வேட்பாளர்கள் தேர்விலும் தீவிரம் காட்டி வருகின்றன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியானது.

    இதில் 18 தொகுதிகளின் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றன.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெற்றி பெற்றார். ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்ததை தொடர்ந்து, அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதிவி யேற்றுக் கொண்டார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    அதேபோன்று மக்களவை தொகுதி தேர்தலில் 2 எம்.எல்.ஏ.க்.கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதாவது செலக்கரா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராதாகிருஷ்ணன் ஆலத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாபி பரம்பில் வடகரா மக்களை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர்கள் இருவரும் எம்.பி.க்களாக பதவியேற்றனர்.

    இதனால் செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.


    கேரள மாநிலத்தை பொறுத்தவரை வயநாடு மக்களவை தொகுதி மற்றும் செலக்கரா-பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன. வழக்கமாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே அந்த 3 தொகுதிகளும் காலியாக இருக்கின்றன. இதனால் அந்த தொகுதிகளுக்கு விரைவிலேயே இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எந்த நேரத்தில் அறிவிக்கப்பட்டாலும் இடைத்தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. மேலும் வேட்பாளர்கள் தேர்விலும் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

    வயநாடு தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

    வயநாடு தொகுதியில் கடந்த 2019 மற்றும் தற்போது நடந்துமுடிந்த தேர்தல் என இரு மக்களவை தேர்தல்களிலுமே ராகுல்காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    அதனை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றிபெறுவார் என்று காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

    அவருக்கு எதிராக செல்வாக்கு மிகுந்த வேட்பாளர்களை களமிறக்குவதில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க. தீவிரம் காட்டுகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆனி ராஜாவையே போட்டியிட வைக்க அக்கட்சி விவாதித்து வருகிறது.

    பா.ஜ.க. சார்பில் சோபா சுரேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இதேபோன்று செலக்கரா மற்றும் பாலக்காடு சட்ட மன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றியும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரம்யா ஹரிதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பிரதீப், பா.ஜ.க. சார்பில் டாக்டர் சரசு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    பாலக்காடு தொகுதியில் யாரை நிறுத்தலாம்? என்று காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தங்களது கட்சி நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.

    அந்த தொகுதியில் இரு கட்சிகளின் சார்பிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் பணியை விரைவு படுத்தும் வகையில் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தயாராக இருக்கின்றன.

    Next Story
    ×