என் மலர்
இந்தியா
பெண் தொழில் அதிபருக்கு மனநல பரிசோதனை: கொலை பின்னணி என்ன?- போலீஸ் விசாரணை
- ஞாயிற்றுக்கிழமை தோறும் வெங்கட்ராமன் மகனுடன் செல்போனில் பேசி வந்தார்.
- கொலையை மறைக்க முயன்றதுடன், கொலைக்கான தடயங்களை அழிக்கவும் சுசனா சேத் முயற்சி செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
பெங்களூரு:
பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் சுசனா சேத்(வயது 39)- வெங்கட்ராமன் தம்பதி. என்ஜினீயர்களான இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சுசனா சேத் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர். வெங்கட்ராமன், கேரளாவை சேர்ந்தவர் ஆவார். தகவல் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் நிபுணத்துவம் பெற்றவரான சுசனா சேத் பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் அறிவியல் தொடர்பான நிறுவனத்தை தொடங்கி, அதன் செயல் அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார்.
இந்த தம்பதிக்கு 4 வயதில் சின்மய் என்ற மகன் இருந்தான். இதற்கிடையே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். மேலும் இருவரும் விவாகரத்து கோரி பெங்களூரு குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தம்பதி பிரிந்து வசிப்பதால் ஞாயிற்றுக்கிழமை தோறும் மகன் சின்மயை பார்க்க வெங்கட்ராமனுக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் வெங்கட்ராமன் மகனுடன் செல்போனில் பேசி வந்தார். ஆனால் கணவர் தனது மகனிடம் பேசுவதால் தன்னிடம் இருந்து மகனை பிரித்துவிடுவார் என கருதியதுடன், கணவர் மீதான வெறுப்பில் சுசனா சேத் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி கோவாவுக்கு மகனுடன் சென்ற சுசனா சேத் அங்குள்ள வடக்கு கோவாவில் கேன்டோலிம் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் அறை எடுத்து தங்கினார். அன்று நள்ளிரவே அதிகளவு இருமல் மருந்தை மகன் சின்மய்க்கு கொடுத்துள்ளார். இதனால் சிறுவன் மயக்க நிலைக்கு சென்றுள்ளான். பின்னர் மூச்சை திணறடித்து அவரது பால் முகம் மாறாக மகனை கொன்றுள்ளார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கம் போல் வெங்கட்ராமன், சுசனா சேத்தின் செல்போனுக்கு போன் செய்து மகனிடம் பேச கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் மகன் தூங்கிக் கொண்டிருப்பதாகவும், கண்விழித்த பிறகு பேச வைப்பதாகவும் கூறி செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். பின்னர் தானும் கத்தரிக்கோலால் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அறையை சுத்தம் செய்ய ஊழியர்கள் வந்ததால் தற்கொலை முடிவை கைவிட்ட சுசனா சேத் மகனின் உடலை ஒரு சூட்கேசில் வைத்துக்கொண்டு பெங்களூருவுக்கு வாடகை காரில் புறப்பட அந்த குடியிருப்பு ஊழியர்களிடமே காரை பதிவு செய்துள்ளார்.
அதன்படி அவர்களும் ஒரு வாடகை காரை பெங்களூருவுக்கு அவர் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். ஆனால் மகனை மூச்சை திணறடித்து கொன்றதால் சிறுவன் சின்மய் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. இதனால் சுசனா சேத் தங்கியிருந்த அறையில் ரத்த கறை படிந்திருந்தது. மேலும் சுசனா சேத்தின் நடவடிக்கையும் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தது.
மேலும் அறை எடுக்க சிறுவனுடன் வந்தவர், சூட்கேசுடன் புறப்பட தயாரானதும் ஊழியர்களுக்கு சுசனா சேத் மீதான சந்தேகம் வலுக்க காரணமானது. இதையடுத்து ஊழியர்கள் கோவா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு போலீசார், குடியிருப்பு ஊழியர்களிடம் சுசனா சேத் பயணித்த காரின் செல்போன் எண்ணை வாங்கி பேசியுள்ளனர்.
தகவல் அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் நிபுணத்துவம் பெற்றவரான சுசனா சேத்துக்கு இந்தி, ஆங்கிலம், கன்னடம் மொழி பேசத் தெரியும் என்பதால், கோவா போலீசார் கார் டிரைவருடன் கொங்கன் மொழியில் பேசி, சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா ஐமங்களா போலீஸ் நிலையத்திற்கு செல்ல அவ்வப்போது ஆலோசனை கூறி வந்தனர்.
அதன்படி காரை டிரைவரும் ஐமங்களா போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார். பின்னர் ஐமங்களா போலீசார் காரில் இருந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அப்போது தான் சுசனா சேத் மகனை கொன்று உடலை சூட்கேசில் திணித்து பெங்களூருவில் உள்ள தனது வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்றதும், பின்னர் அவரும் தற்கொலை செய்யும் முடிவை எடுத்திருந்த திடுக்கிடும் தகவல் வெளியானது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசாார் சுசனா சேத்தை கைது செய்தனர். அவரை கோவா போலீசார் வந்து கைது செய்து அழைத்து சென்று 6 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே சிறுவன் சின்மய் உடல் கடந்த 9-ந்தேதி நள்ளிரவு பிரேதப் பரிசோதனை செய்து, இந்தோனேசியாவில் இருந்து வந்த அவனது தந்தை வெங்கட்ராமனிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று முன்தினம் பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள அரிச்சந்திரா காட் மயானத்தில் சிறுவன் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே சுசனா சேத்திடம் கோவா போலீசார் கொலைக்கான காரணம் என்ன?, எப்படி மகனை கொலை செய்தீர்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி விசாரித்தனர். முதலில் மகனை தான் கொலை செய்யவில்லை என்றும், உடல் நலம் சரியில்லாததால் இருமல் மருந்து கொடுத்ததாகவும், காலையில் பார்த்தபோது சின்மய் அசைவற்ற நிலையில் இருந்ததாகவும், இதனால் தானும் தற்கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்தார்.
அதன்பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கணவர் மீதான வெறுப்பாலும், மகனை கணவர் தன்னிடம் இருந்து பிரித்து சென்றுவிடுவார் என்ற அச்சத்தாலும் மகனுக்கு அதிகளவு இருமல் மருந்து கொடுத்ததுடன், மூச்சுத்திணறடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். அத்துடன் கொலையை மறைக்க முயன்றதுடன், கொலைக்கான தடயங்களை அழிக்கவும் சுசனா சேத் முயற்சி செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் கைதான சுசனா சேத்திற்கு போலீசார் மனநல பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவரை கோவா பனாஜியில் உள்ள மனநலம் ஆலோசனை மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு சுசனா சேத்துக்கு மனநல பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக கோவா போலீசார் கூறுகையில், தான் பெற்றெடுத்த பால்முகம் மாறாத 4 வயது மகனை கொடூரமாக கொன்ற சுசனா சேத்தின் மனநிலையை அறியவும், கொடூர கொலையின் குற்ற பின்னணி பற்றி கண்டறியும் உளவியல் சோதனை நடத்த முடிவு செய்தோம். அதன்படி அவரை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். அதன் அறிக்கை வந்த பிறகே இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எனவே அந்த அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றனர்.