என் மலர்
இந்தியா
வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பாத யாத்திரை- பழங்குடி இன பெண்களுடன் கலந்துரையாடல்
- ராகுல் காந்தி பாதயாத்திரை சென்ற பகுதி எங்கும் தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.
- ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று இரவு மலப்புரம் நிலம்பூரில் நிறைவு பெறுகிறது.
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா முழுவதும் ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார்.
கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய பாதயாத்திரை 11-ந் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி அவரது சொந்த தொகுதியான வயநாட்டில் பாதயாத்திரை மேற்கொண்டார்.
மலப்புரம் பாடி, பாண்டிக்காடு பள்ளியில் இருந்து காலை 6.30 மணிக்கு பாதயாத்திரை தொடங்கிய அவர் 10.30 மணிக்கு வண்டூர் சந்திப்பை சென்றடைந்தார்.
ராகுல் காந்தி பாதயாத்திரை சென்ற பகுதி எங்கும் தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். இதுபோல மலையோர கிராமங்களை சேர்ந்த ஏராளமான பழங்குடி இன பெண்களும் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.
அப்போது ராகுல் காந்தி பழங்குடி இன பெண்களின் அருகில் சென்று அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். இதுபோல பாதுகாப்பு அரணையும் மீறி சென்று குழந்தைகளையும், சிறுவர்களையும் சந்தித்து கைகுலுக்கினார்.
ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று இரவு மலப்புரம் நிலம்பூரில் நிறைவு பெறுகிறது. நாளை அவர் தமிழகத்தின் மலையோர கிராமமான கூடலூர் செல்கிறார்.
அங்கு பஸ் நிலைய பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதன்பின்பு அவர் கர்நாடாக மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார்.